அமைச்சுக்கான செயலாளர் களுக்கு ஜனாதிபதி கோட்டா ஆலோசனை
Share
மக்கள் மத்தியில் சென்று பணியாற்றுங்கள். மக்களுக்கு விரைவில் பிரதிபலன்களைப் பெற்றுக் கொடுப்பதே தற்போதைய தேவையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சுக்கான செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
35 இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐந்து வருட திட்டமொன்றை வகுக்க வேண்டிய பாரிய பொறுப்பு செயலாளர்களுக்கு உள்ளது.
ஒவ்வொரு வருடத்திலும் அடைய வேண்டிய இலக்குகளை அதில் குறிப்பிட வேண்டும்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் மத்தியில் சென்று பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வு வழங்குங்கள்.
அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை அற்றுப் போயுள்ளமை மக்களிடம் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.
அடுத்ததாக, அரச சேவை மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளது. துரித பெறுபேறு அவசியம். மக்களும் துரித பெறுபேற்றையே எதிர்பார்க்கின்றனர் எனக் கூறினார்.