நாய்க்கடிக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Share
வவுனியாவில் நாய்க்கடிக்கு இலக்காகி வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மரணமடைந்துள்ளார்.
அவருக்கு தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இறந்தவரது உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா மகாறம்பைக்குளம் புளியடிப் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் கடந்த இரண்டு நாட்களிற்கு முன்பாக நாய்க் கடிக்கு இலக்காகியுள்ளார்.
இந்நிலையில் அதற்கான தடுப்பூசியை போடுவதற்காக வவுனியா வைத்திய சாலைக்கு நேற்றைய தினம் அவர் சென்றுள்ளார்.
அவருக்கு நாய் கடித்ததற்கான தடுப்பூசி நேற்றுக் காலை போடப்பட்டது. அதன்பின்னர் அவர் வீட்டிற்கு சென்றார்.
வீட்டிற்கு வந்த நிலையில் அவருக்கு திடீர் என்று சுகயீனம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் புளியடிப் பகுதியைச் சேர்ந்த சிவபாலன் (வயது – 49) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.
குறித்த மரணம் தவறுதலான தடுப்பூசி ஏற்றப்பட்டமையாலேயே சம்பவித்ததாக மரணமடைந்தவரின் உறவினர்கள் வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சி.கிசோர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.