தாலிக்கொடி திருடன் கைது
Share
யாழ்.அராலிப் பகுதியில் வீடொன்றின் கூரைபை பிரித்து உள்நுழைந்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை கோப்பாய் பொலிஸாரின் மோப்ப நாய் ரொக்கியின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலிப் பகுதியில் நேற்று முன்தினம் வீட்டின் கூரையை உடைத்து வீட்டிலிருந்த தாலிக்கொடி திருடப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கோப்பாய் பொலிஸ் பிரிவினரிடம் இருக்கும் மோப்ப நாய் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் இடம் பெற்ற வீட்டுக்குச் சென்ற மோப்பநாய் பிரிவினர் “ரொக்கி” என்ற மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து அண்மையிலுள்ள வீடு ஒன்றிற்குள் குறித்த மோப்பநாய் சென்றுள்ளது.
அவ்வாறு சென்ற வீட்டின் உரிமையாளரை பொலிஸார் விசாரணை செய்தபோதுதான் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து திருடியதாக கூறப்படும் ஐந்த ரைப் பவுண் தாலிக் கொடியை குறித்த சந்தேக நபரின் வீட்டிற்கு அண்மையில் உள்ள பற்றைக்குள் ஒளித்து வைத்துள்ளதாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
பின்னர் பொலிஸாருடன் சென்று அதனை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.