Type to search

Headlines

தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துக

Share

முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர்போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதியளித்தார்.

அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்.

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ஒன்றுதிரட்டி அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான இன்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

எனவே தனிமைப்படுத்தல் சட்டத்துக்குட் பட்டு அந்த நிகழ்வுகளை நடத்தத் தடை உத்தரவு வழங்கவேண்டும் என்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ விண்ணப்பம் செய்தார்.

இந்த விண்ணப்பத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணிகள் நடராசா காண்டீபன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் மற்றும் வரதராசா பார்த்திபன், வாசுகி, கிருபாகரன், தனுஷன், விஷ்ணுகாந்த் மற்றும் தமிழ்மதி ஆகிய 11 பேரின் பெயர்கள் இடப்பட்டு அவர்கள் நிகழ்வை நடத்தத் தடை உத்தரவு வழங்குமாறு கோரப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விண்ணப்பத்தை பொலிஸார் முன்வைத்தனர்.

விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட 11 பேரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ஒன்றுதிரட்டி அஞ்சலி நிகழ்வுகளை நடத்துகின்றனர் என்று காணொளிப் பதிவுகளை பொலிஸார் சமர்ப்பித்தனர்.

நாம் அவர்களை சமூக இடைவெளியைப் பேணுமாறு கேட்டுக் கொண்டால், எம்மை நீதிமன்றம் செல்லுமாறும் தாம் நீதி மன்றில் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே தனிமைப்படுத்தல் சட்டத்துக்குட்பட்டு இன்றைய தினம் ஒன்றுதிரண்டு அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவிட வேண்டும் என்று பொலிஸார் கேட்டுக் கொண்டனர்.

பொலிஸாரின் மனுவை ஆராய்ந்த நீதவான், தனிமைப்படுத்தல் சட்டத்தை கடைப் பிடித்து அஞ்சலி நிகழ்வுகளை நடத்த அனுமதியளிக்க உத்தரவிட்டார்.

அத்துடன், பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30ஆம் திகதிவரை நீதவான் ஒத்திவைத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link