Type to search

Headlines

கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புக்களுக்கு செல்ல மறுப்பு

Share

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்குள் நேற்று அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாணவர்களின் அட்டகாசத்தினால் விரிவுரையாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார்.

கலைப்பீட அவை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நேற்று ஊடகங்களிற்கு அவர் அறிவித்தார்.

இதன்போது, கலைப்பீட அவை சார்பில் வெளியிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு,
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிற்குள் இடம்பெற்ற மோதலை தீர்த்து வைக்க முயன்ற துணைவேந்தர், பீடாதிபதி, விரிவுரையாளர்கள், பல்கலைக் கழக அதிகாரிகள் ஆகியோர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களினால் அவதூறிற்கும், தாக்குதலிற்கும் ஆளானமையை கலைப்பீட அவை கண்டிப்பதுடன், உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறது.

கலைப்பீட 2ஆம், 3ஆம் வருட மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் தொடர்பில், கலைப்பீட அவை நேற்றுக் காலை கூடி மேற்படி தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

இது தொடர்பில் கலைப்பீட அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கலைப்பீட மூன்றாம் வருட மாணவரொருவரால், இரண்டாம் வருட மாணவரொருவர் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றின் திறப்பு பலவந்தமாகப் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருசாராருக்கிடையே முறுகல் நிலை தோன்றியது.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் வருட மாணவர்களும் மூன்றாம் வருட மாண வர்களும் பல்கலைக்கழகத்திற்கு உள்ளே யும் வெளியேயும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

நிலைமையின் தீவிரத்தைத் தொடர்ந்து, ஏற்கெனவே மோதல்களைத் தவிர்ப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவ ஆலோசகர்களுடன் துணைவேந்தரும் பீடாதிபதியும் விரிவுரையாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதன்போது, பல்கலைக்கழக மாணவ ஒழுக்காற்று அதிகாரியிடம் முறையிடச் சென்றிருந்த இரண்டாம் வருட மாணவர்கள், மூன்றாம் வருட மாணவர்களால் தாக்கப்படும் ஆபத்து உணரப்பட்டிருந்தது.
அதனைத் தடுப்பதில் துணைவேந்தரும் பீடாதிபதியும் விரிவுரையாளர்களும் அச்சத்தில் காணப்பட்ட இரண்டாம் வருட மாணவர்களை சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முயன்றபோது, மூன்றாம் வருட மாணவர்கள் துணை வேந்தரையும் விரிவுரையாளர்களையும் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அவதூறு செய்தும், பாதுகாப்பாக இரண்டாம் வருட மாணவர்களை வெளியேற்றும் முயற்சிகளைப் பலவந்தமாகத் தடுப்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதன் ஒரு கட்டத்தில், துணைவேந்தரும் சில விரிவுரையாளர்களும் மூன்றாம் வருட மாணவர்கள் சிலரால் தாக்கப்படக் கூடிய அளவிற்கு நிலைமை தீவிரமடைந்தது. இதன் விளைவாக, குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டது.

உண்மை நிலைவரம் இவ்வாறிருக்க, மோதலில் ஈடுபட்ட மாணவர்களால் உண்மைக்கு மாறான செய்திகள் ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட்டன.
சில விரிவுரையாளர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்றும், சிலர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மாணவர்கள் மீது மேற்கொண்டார்கள் என்றும், மாணவர்களது எதிர்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன என்றும் ஊடகங்களுக்கு மாணவர்களால் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்பதனைக் கலைப்பீட அவை உறுதியாகத் தெரிவிக்கின்றது.

இதனால், மேற்படி மோதலில் உண்மை நிலை வரத்தை எடுத்துரைக்க கலைப்பீட அவை தீர்மானம் மேற்கொண்டதுடன், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் குறிப்பாக கலைப்பீடத்திற்கும் ஏற்பட்ட களங்கத்தை நீக்குமுகமாகவும் சம்பவங்களைத் தெளிவுபடுத்து முகமாகவும் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்படுகிறது.

அதேவேளை, மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் இனங்காணப்பட்டு, அவர்கள் மீது ஒழுக் காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், முதற்கட்டமாக உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்குத் தடை அறிவிக்கப்பட வேண்டுமெனவும், அதுவரை விரிவுரையாளர்கள் விரிவுரைகளை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் கலைப்பீட அவை ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொண்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link