சதமாக நின்றானை வேண்டிய பணிதலின்றி
Share
கொரோனாத் தொற்று இலங்கையில் வேகமெடுக்கத் தலைப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி தாமாக வைத்தியசாலைக்குச் செல்கின்றவர்களின் எண்ணிக்கை ஒரு நாளுக்கு மூவாயிரம் என்ற எல்லையை எட்டி விட்டது.
பொதுவில் மக்கள் மத்தியில் சென்று எழுமாறாக பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டால், தொற்றாளர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தைக் கடந்து போகும் என்பது அனுமானிக்கக் கூடியதே.
அதேவேளை, கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது ஏற்புடைய உண்மை.
நிலைமை இதுவாக இருக்கையில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்திலும் கொரோனாத் தொற்று அதிவேகமாகப் பரவத் தொடங்கி விட்டது.
இந்நிலைமை உச்சத்தைத் தொடும் போது என்ன செய்வது ஏது செய்வது என்ற கையறு நிலைமை ஏற்படும்.
அப்போது எதுவும் செய்ய முடியாத சூழ் நிலை எம்மைப் பற்றிக் கொள்ளும். இதனால்தான் பட்டினத்தடிகள் மனித வாழ்வின் நிலையாமை குறித்து பல இடங்களில் தத்துவ உபதேசமாக நமக்குப் போதித்துள்ளார்.
விட்டுவிடப் போகுது உயிர் விட்டவுடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்…
என்று உபதேசித்த பட்டினத்தடிகள், ஓ! மனிதனே உன்னிடம் இருக்கின்ற செல்வம் எதுவும் உன்னோடு வரப்போவதில்லை ஏன்? காதற்ற ஊசிகூட உன் கடைவழிக்கு வாராது எனும் போது;
மாடு உண்டு கன்டுண்டு மக்கள் உண்டு என்று மகிழ்வதால் பயனேதும் உண்டோ! என்று மனிதர்களைப் பார்த்து அந்த மாதுறவி கேள்வி கேட்கின்றார்.
ஆம், கொரோனாவால் உயிரிழக்கின்ற போது ஊரும் உற்றாரும் குடும்ப உறவுகளும் சதமற்ற தாய் போகம் என்பதை அனுபவத்தில் கண்டோம்.
ஆக, கொரோனாத் தொற்றில் இருந்து எங்களைப் பாதுகாப்பதற்கான அத்தனை நடைமுறைகளையும் பின்பற்றும் அதேநேரம், இந்த உலகத்தில் சதமாக நிற்கும் கச்சித் திருவே கம்பனைத் தொழுது இறைவா! எங்களைக் காத்தருளும் என்று அனைவரும் கூட்டாக – ஒன்றாக வேண்டுவோம்.
அதுவொன்றே எமக்கு இருக்கின்ற ஒரே உபாயம்.
இதற்கு மேலாக இனிவரும் காலங்களில் தர்மத்தின் வழியில் வாழ்வோம். அதர்மத்தை இம்மியும் அணுகோம் என்று கடவுள் சாட்சியாகச் சத்தியம் செய்வோம். நிச்சயம் அறக் கடவுள் எங்களைக் காத்தருள்வான்.