நயினாதீவில் வெசாக் கொண்டாட்டம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
Share
கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது.
நிலைமை எவ்வாறாகுமோ என்ற ஏக்கம் மக்களைப் பீடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பாடசாலைகளை மூடியும் பொது நிகழ்வுகளை நிறுத்தியும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள இடங்களை முடக்கியும் தொற்றைத் தடுக்கின்ற நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகள் எதுவரை நீடிக்கும் என்பது தெரியாத விடயமாக இருக் கையில், எதிர்வரும் வெசாக் பண்டிகையின் தேசிய நிகழ்வுகளை நயினாதீவில் நடத்து வதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடக்கின்றன.
கெளதம புத்தபிரான் பரிநிர்வாணம் அடைந்த வைகாசிப் பெளர்ணமி, புனிதமான நாள்.
அன்றைய நாளை பெளத்த மக்கள் தங்களின் உன்னதமான இறைவழிபாட்டுக் கால மாகப் போற்றுகின்றனர்.
அந்தவகையில் இந்த வருடம் வெசாக் கொண்டாட்டத்தின் தேசிய நிகழ்வை நயினா தீவில் நடத்துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்தீர்மானம் ஏற்கெனவே எடுக் கப்பட்டது.
ஆயினும் தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனாத் தொற்றுக் காலத்தில் தென் பகுதியில் இருந்து மக்கள் நயினாதீவுக்கு வருகை தந்து வெசாக் பண்டிகையைக் கொண்டாடும்போது, கொரோனாத் தொற்று யாழ்ப்பாணத்தில் வேகம் எடுக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.
அண்மையில் இந்தியாவில் நடந்த கும்ப மேளா நிகழ்வில் இலட்சக்கணக்கான மக்கள் கூடியதால் கொரோனாத் தொற்று கண்ட பாட்டில் பரவியதான தகவல்கள் உண்டு.
இந்நிலையில் வெசாக் பண்டிகையின் தேசிய நிகழ்வை நயினாதீவில் நடத்தும் போது, அது யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றை வேகமாகப் பரவச் செய்யும் என்ற விடயம் கவனிக்கப்பட வேண்டும்.
இதை நாம் கூறும்போது; நயினாதீவில் நடத்தப்படுகின்ற தேசிய வெசாக் பண்டிகை யில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மக்கள் கலந்து கொள்வர் என யாரேனும் கூறலாம்.
ஆனால் மேற்படி வெசாக் கொண்டாட்டத்தில் அரச தலைவர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்ளும்போது, பொலிஸாரும் முப்படையினரும் தாராளமாகப் பங்கேற்பர். இவ்வாறு படையினர் பங்கேற்பது தவிர்க்க முடியாது.
அதேநேரம் யாழ்ப்பாணத்தில் மேற்கொள் ளப்படுகின்ற பிசிஆர் பரிசோதனைகளில் பொலிஸாரும் படையினரும் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதியா கியுள்ளது.
ஆக, நயினாதீவில் நடைபெறும் வெசாக் பண்டிகையில் படையினர் பங்கேற்கும்போது அஃது கொரோனாத் தொற்றின் பரவுகையை ஊக்குவிக்கும் என்பதை இங்கு கூறித் தானாக வேண்டும்.
எனவே சமகால சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, நயினாதீவில் நடைபெற இருக்கும் தேசிய வெசாக் கொண்டாட்டம் பற்றி மறுபரிசீலனை செய்வது உத்தமமானது.
இதுபற்றி உரியவர்கள் ஆழ்ந்து சிந்திப்பது மிக மிக அவசியம்.