Type to search

Editorial

ஐந்து வீடு கொடுத்திருந்தால் துரியோதனன் மாண்டிரான்

Share

அறத்தைப் போதிப்பதற்காக எழுதப்பட்ட வையே புராண இதிகாசங்கள் ஆகும்.
இவை இந்து சமயம் சார்ந்த அறநூல்கள். இதுபோல கத்தோலிக்க சமயம் புனித விவிலியத்தின் மூலமாக மனித குலத்தை அறத்தின்பால் வழிப்படுத்துகிறது.
பெளத்தத்துக்கு திரிபீடகமும் இஸ்லாத்துக்கு குரானும் தர்ம நூல்களாகும்.
ஆக, எல்லாச் சமயங்களும் அறத்தைப் போதிக்கின்றன.


தாம் போதிக்கின்ற அறம் மக்கள் சமூகத்தைச் சென்றடைவதற்காக வரலாற்றுச் சம்பவங்கள் கதைகளாக எழுதப்பட்டுள்ளன.
அந்த வகையில் மகாபாரதம் எனும் இதிகாசம் பகவத்கீதை எனும் தத்துவ உபதேசத்தைத் தந்தருளுகிறது.
மகாபாரதம் எடுத்தியம்பும் கதை மிகப் பெரியதாயினும் அந்தக் கதையின் மூலமாக மனித சமூகத்துக்கு எடுத்துக்கூறுவது;


நீ எதையும் கொண்டுவரவில்லை. ஆகையால் நீ போகும்போது எதனையும் கொண்டு போகமுடியாது.
இந்தச் சரீரம் இந்த மண்ணில் எடுக்கப்பட்டது என்பதால், அதனையும் பஞ்சபூதங்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போகிறாய். இதுவே நிஜம்.
நிஜம் இதுவாக இருக்கையில், இது என்னுடையதென்றும் இந்த நாடு – இந்தத் தேசம் எங்கள் இனத்தினுடையதென்றும் கூறுவதால் ஏதேனும் நன்மையுண்டா?
இன்று உன்னுடையது நாளை இன்னொருவருடையதாகின்றது. நாளை மறுதினம் வேறொருவருடையதாகிறது.


இதுவே என் படைப்பின் இரகசியம் என்கிறார் கீதோபதேசம் செய்த கிருஷ்ணபரமாத்மா.
ஆம், நாடு கேட்ட பாண்டவர்கள் குறைந் தது ஐந்து வீடேனும் தருக! என்று கெளரவர் தலைவன் துரியோதனனிடம் கேட்டனர்.
ஆனால் ஆணவச் செருக்குத் தலைக்கேறி நின்ற துரியோதனன் ஐந்து வீடும் தர முடியாது என்றான். அதுவே அவனுக்கு மாரகமாயிற்று.
இதனையே மகாபாரதம் எனும் இதிகாசம் இவ்வுலகுக்கு உபதேசிக்கிறது.
இதுபோல எல்லாச் சமயங்களதும் மூல நூல்கள் தர்மத்தை எடுத்துக்கூறி, இந்தப் பிரபஞ்சத்தின் இயல்பை – அதன் நியதியை உய்த்துணருமாறு போதிக்கின்றன.
எனினும் சிலர் அதர்மத்தின் வழியில் பயணிப்பதையே வீரமாகவும் அதிகாரமாகவும் கருதுகின்றனர்.


இதற்கு இலங்கை அரசாங்கமும் நல்லதோர் உதாரணம்.
ஆம், தமிழ் மக்களுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் செய்கின்ற அதர்மம் கொஞ்சநஞ்சமன்று.
இந்த அதர்மத்தை தட்டிக் கேட்காமல் உலக நாடுகளும் மெளனம் காக்கின்றன.
ஆனால் இதுவே ஆட்சியாளர்களுக்கு அவலமாகவும் ஆபத்தாகவும் அமையலாம். இதைத்தான் ஐந்து வீடு கேட்டபோதும் இல்லை என்ற துரியோதனனின் கதை உணர்த்தி நிற்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link