Type to search

Editorial

அவலம் நிறைந்த காலம் இது எவர் மனதையும் நோகடிக்காதீர்கள்

Share

கொரோனாத் தொற்றினால் இயல்பு வாழ்க்கை குழம்பிக் கிடக்கிறது.


அதிலும் கொரோனாக் காலத்தில் இறப்பவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு உறவினர்கள் படும் பாட்டைப் பார்க்கும் போது மனம் பதட்டமடைகிறது.


அதிலும் கொரோனாவால் இறப்பு ஏற்பட்டது என்றால், அவ்வளவுதான். பெற்ற பிள்ளைகள்கூட அருகில் நிற்க முடியாத அளவில் நிலைமை வந்துவிடுகின்றது.


என்ன செய்வது நோயில் இப்படியொருநோய். இறப்பில் இப்படியொரு இறப்பு என்று காலத்தை நோகின்ற அளவிலேயே மனித குலத்தின் விதி எழுதப்பட்டிருக்கிறது.


இவையொரு புறமிருக்க, கொரோனாக் காலத்தில் ஒட்டுமொத்த மருத்துவ சேவைகளும் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் மருத்துவத் துறையை நோக்கிய பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்னெழுந்துள்ளன.


மேற்போந்த நிலைமை இன்னும் மோசமடையுமாயின், மருத்துவ சேவையுடன் பொதுமக்கள் முரண்படுகின்ற சூழ்நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். இங்குதான் அனைத்துத் தரப்புகளும் நிதானத்துடனும் அன்பு, பாசம், இரக்கம் என்ற பண்புடைமையுடனும் சமகால சூழமைவைப் புரிந்து கொண்டும் செயற்பட வேண்டியவர்களாக உள்ளனர்.


அதிலும் குறிப்பாக கொரோனாத் தொற்றினால் ஒருவர் இறந்து விட்டார் எனில், அது விடயத்தில் உறவுகளைக் கையாள்வதிலும் நிலைமையை அவர்களுக்கு எடுத்துரைப்பதிலும் நிதானமும் பரிவும் கொண்டவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்.


இதற்கு மேலாக, கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாயின் அதுபற்றிய தகவலை அவர் தம் உறவுகளுக்குத் தெரியப்படுத்துவதில் எந்தக் காலதாமதத்தையும் ஏற்படுத்தக் கூடாது.


இதுவிடயத்தில் காட்டப்படும் அசமந்தத் தனங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தவே செய்யும்.

உதாரணத்துக்கு ஒருவர் உயிரிழந்துவிட்டார். அவரின் இறப்புக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிவதற்கு முன்னதாக அவர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை உறுதி செய்து அதனை உறவுகளுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துதல் வேண்டும்.


இதைவிடுத்து பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நாளை வரும். நாளை மறுதினம் வரும் என்று காலதாமதத்தை ஏற்படுத்தி விட்டு,சம்பந்தப்பட்டவர் கொரோனாவால் – நிமோனியாவால் இறந்துள்ளார்.

எனவே அவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாது என்று அறிவிக்கும்போது அதனால் சம்பந்தப்பட்டவரின் உறவுகளுக்கு ஏற்படக்கூடிய மனத்தாக்கம் சாதாரணமானதல்ல.


இதுவிடயங்களில் மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டு மற்றவர்களின் மனங்களை நோகடிக்காமல் பார்த்துக் கொள்வது மருத்துவத் துறையினரது தலையாய கடமையாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link