Type to search

Editorial

வைகை நதி பெருக்கெடுக்க காரணமாக இருந்தது என்ன?

Share

சமயம் என்ற சொல் சமைத்தல் என்ற வினை அடியில் இருந்து உற்பவம் ஆனது.
உணவைப் பண்படுத்துவது சமையல். மனிதர்களைப் பண்படுத்துவது சமயம்.
பண்படாத மனிதர்களால் இந்த உலகம் வதைபடும் – துன்பப்படும். ஈற்றில் பண்படாத வர்கள் படுகுழியில் வீழ்ந்து பாவத்தின் சன்மானத்தை அனுபவிப்பர்.

எனினும் பாவ பழி பற்றிப் பலரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

இவ்வாறு சிந்திக்காமைக்கு இறை நம்பிக்கையின்மையே காரணமாகும்.

இறை நம்பிக்கையுடையவர்கள் எப்போதும் தர்மத்தின் வழியில் தங்களை நடத்திச் செல்வர்.

இதைக் கூறும்போது, இறை நம்பிக்கையுடையவர்கள் ஏமாற்றவில்லையா? என்று யாரேனும் கேட்கலாம்.

அவ்வாறு ஏமாற்றுபவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் போல் நடிக்கின்றனரே தவிர, அவர்கள் இதய சுத்தியான இறை நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல என்பதே உண்மை.
இறைவனால் படைக்கப்பட்ட இந்த மண் ணில் அனைவரும் நல்ல வண்ணம் வாழ முடியும்.

ஆனால் அக்கிரமக்காரர்களும் ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றவர்களும் அதர்மத்தைச் செய்ய;

அதனால் அவஸ்தைப்படுபவர்கள் ஆற்றாது கண்ணீர் விட, அந்தக் கண்ணீர் நிம்மதி எனும் பெரும் செல்வத்தை அழித்து நிற்கிறது. இதுவே உண்மைத் தத்தவம்.
இந்தத் தத்துவத்தை எடுத்தியம்பவே வைகை நதி பெருக்கெடுக்கிறது.

ஆம், பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து விடுகின்றான்.

மாணிக்கவாசகர் சிறையில் அடைபட்டிருப்பது கண்டு இறை பரம்பொருள் துன்பப்படு கிறார்.

என் அன்புக்குரியவன் சிறையில் அடைபட்டிருக்க நீங்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்ன? சீற்றம் கொண்ட சிவன் வைகை நதியைக் பெருக்கெடுக்கச் செய்கிறார்.

அந்தோ! நாட்டு மக்கள் அச்சம் கொள்கின்றனர். வெள்ளப்பெருக்கைத் தடுக்க அணை கட்டுமாறு மன்னன் உத்தரவிடுகின்றான்.

அதற்குப் பின்பு நடந்தவை நீங்கள் அறிந்ததே.

மாணிக்கவாசகர் சிறையில் அடைபட்டிருந் ததாலேயே வைகை நதி பெருக்கெடுத்தது என்ற உண்மையை மன்னன் உணர்ந்து கொண்டு அவரை விடுவித்து தன் பிழைக்குப் பரிகாரம் தேடிக் கொண்டான்.

ஆக நல்லவர்கள், ஏழைகள், அப்பாவிப் பொதுமக்கள், சிறுவர்கள், முதியவர்கள் துன் பப்படும்போது – கஷ்ரப்படும்போது இந்த உலகம் தன் மகிழ்வை இழந்து விடுகிறது.

எனவே உலகம் நிம்மதியை இழக்கும்போது மனிதர்கள் நடமாட முடியாமல் வீடுகளுக்குள் சிறைபட்டு இருக்கும்போது; எங்கோ அப்பாவிகள் சிறைப்பட்டுள்ளனர்.

ஏதும் அறியாதவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களை நினைந்து ஆற்றாது கண்ணீர் ஓடிய வண்ணம் உள்ளது.

இந்த நிலைக்கு உலகம் உறுதுணை புரிந்துள்ளது.

உலக வல்லரசுகள் உணவைத் தடை செய்து ஏழைச் சிறார்களை கழுகுக்கு இரையாக்கு கின்றன என்ற உண்மைகள் உணரப்பட வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link