விவசாயப் புரட்சி ஏற்பட முரசு அறையுங்கள்
Share
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று உலகத்துக்கு உரக்கக் கூறிய இனம் நம் தமிழினம்.
அதனாலன்றோ வேளாண் செய் விவசாயிகள் சூரிய பகவானுக்குப் பொங்கிப் படைத்து நன்றி கூறுகின்ற மிக உயர்ந்த பண் பாட்டை தங்களின் உடைமையாக்கிக் கொண்டனர்.
எனினும் இன்றைய சமகாலத்தில் விவசாயம் என்பது எங்களிடம் இருந்து எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக வட பகுதியில் விவசாயம் கைவிடப்பட்ட துறையாகிப் போனமை வேதனைக்குரியதே.
போர்க்காலச் சூழல்கள் அதன் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடுகள், விவசாய உள்ளீடுகளின் வரவின்மை போன்றவற்றால் விவசாயத்தை நம்பியிருந்தவர்கள் அந்தத் துறைக்குப் பிரியாவிடை கொடுத்தனர். இதனால் விவசாயத்துறை வீழ்ச்சி கண்டது.
ஒருகாலத்தில் மிளகாய் விற்று வீடு கட்டியவர்கள் தமிழர்கள் என்ற பெருமைக்கு ஆளாகி இருந்த நாம் இன்று அனைத்து விவசாய முயற்சிகளையும் கைவிட்டுள்ளோம்.
இந்த நிலைமை எம் இனத்துக்கு ஆரோக்கியமானதல்ல.
எனவே எங்கள் தமிழர் தாயகத்தில் மீண்டும் விவசாய எழுச்சி முரசு கொட்டட்டும்.
எமதருமை மக்களே! வானம் பொழிய பூமி விளைய வசந்தம் பிறக்கும் வாருங்கள். எங்கள் விவசாய நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவோம்.
சிறுநிலப்பரப்பில் விவசாயம் செய்வதற் காக உடல் உழைப்பை வழங்கி வியர்வை சிந்திக் களைத்தவர்கள் நாங்கள். ஆனால் இன்று நிலைமை அதுவன்று. விவசாயச் செய்கையை ஏக்கர் கணக்கில் மேற்கொள்ளக் கூடியவகையில், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மின்சாரக் கிடைப் பனவுகள் தாராளமாகியுள்ளன.
எனவே அரச வேலைக்காகக் காத்திருக் கும் வேலையற்ற பட்டதாரிகள் விவசாய உற்பத்தி முயற்சிகளைப் பெருமெடுப்பில் செய்ய முன்வர வேண்டும்.
விவசாயச் செய்கையுடன் இணைந்த வேளாண் செய்கைகள் என எங்கும் விவ சாயப் பண்ணைகள் உருவாகட்டும்.
ஏக்கர் கணக்கில் தென்னைகளும் பழ வகை மரங்களும் செய்கையாகட்டும்.
இதற்கு மேலாக, எங்கள் மண்ணில் வேரில் பழுத்த பலாபோல இருக்கக்கூடிய கற்பகதருக்களான பனைகளில் இருந்து கிடைக்கக்கூடிய உற்பத்திகளை ஏற்றுமதிக் குரியவையாக மாற்றுவோம்.
இந்த எழுச்சி ஏற்படும்போது, எங்கள் மண் ணில் விளைந்த நெல்லும் தானியங்களும் தென்னை மற்றும் பனை உற்பத்திப் பொருட்களும் வெளிநாடுகளில் இடம்பிடிக்கும்.
அதிலும் தற்போது தானியங்களின் விலைகள் உச்சமாகி இருக்கின்ற வேளையில், அத்தனை விளைநிலங்களும் செய்கைக்குட்படுத்தப்பட வேண்டும்.
இவ் புரட்சிக்காக முரசு அறையுங்கள்.