வாரியார் புகழ்ந்தேத்திய ஆன் கன்றும் கோன் கன்றும்
Share
சிவனருட்செல்வர் என்ற நூலைத் தந்தவர் திருமுருக கிருபானந்தவாரியார்.
சமயச் சொற்பொழிவினால் உலகைக் கவர்ந்தவர் வாரியார்.
அவர் ஆன் கன்றும் கோன் கன்றும் என சொற்பொழிவாற்றினார்.
ஆன் கன்று என்பது பசுவின் கன்றைக் குறிக்கும். கோன் கன்று என்பது மன்னன் மகனை விளிக்கும்.
ஆக, மனுநீதி கண்ட சோழ மன்னனின் கதையையே வாரியார் ஆன் கன்றும் கோன் கன்றும் எனத் தலைப்பிட்டார்.
மனுநீதிச் சோழ மன்னனின் ஒரே மகன் வீதிவிடங்கன் தேர் செலுத்தும்போது, பசுவின் கன்றொன்று தேர்க்கால் இடைப்பட்டு இறந்து போனது.
தன் பிள்ளை இறந்த துயர் தாங்க முடியாத பசு, மன்னன் மனுநீதிச் சோழனின் அரண்மனை நோக்கிச் சென்று, அங்கிருக்கக் கூடிய ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பி னால் இழுத்து அடிக்கிறது.
ஆராய்ச்சி மணி ஒலிப்பதை செவிமடுத்து அதிர்ந்த மனுநீதி; தன் மந்திரியை அழைத்து காரணம் கேட்கிறான்.
நடந்த சம்பவத்தை மந்திரி சொல்ல அந்தோ! அந்தப் பசு படும் வேதனையை எங்ஙனம் போக்குவேன் எனத் துன்புறுகிறான்.
ஈற்றில் தன் கன்றை இழந்து தவிக்கும் பசுபோல தானும் துன்பம் அனுபவிப்பதே ஒரே வழி எனத் துணிந்து, தன் மகன் வீதிவிடங்கனை வீதியில் கிடத்தி தானே தேர் செலுத்தி, தேர்க்காலால் தன் ஒரே மகனைக் கொல்கிறான்.
இங்கு மனுநீதிச் சோழனின் நீதிக்கு நிகர் ஏதுமில்லை.
தவிர, ஆன் கன்று எனக் குறிப்பிட்ட வாரியார் மன்னன் மகனைக் கோன் கன்று என் றார்.
இஃது அஃறிணை, உயர்திணை பேதமை யல்லவா? என்று யாரேனும் கேட்கலாம்.
இங்குதான் பசுவின் பால் தாய்ப்பாலுக்கு ஒப்பானது என்பதால், பசுவைத் தாயாகப் போற்றும் நம் மரபில் பசுவின் கன்றை உயர்த்தும் பொருட்டு மன்னனின் மகனைக் கோன் கன்று என்றார் வாரியார்.
ஆக, பசுவைத் தாயாகப் போற்றுகின்ற நம் உயர் பண்பாட்டில் பசு வதை என்பதற்கு இம்மி யும் இடமிருத்தலாகாது.
எனவே மாடு வெட்டுவதற்கு, பிரதமர் மகிந்த ராஜபக்வால் கொண்டு வரப்படுகின்ற தடையை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
பசுவதையைத் தடுப்பதன் மூலம் அம்மா என்று கதறுகின்ற தாய்மை பாதுகாக்கப்படும். பசுவதைக்கு எதிராக நம் முன்னோர்கள் எடுத்து முயற்சிகள் காலம் தாழ்த்தியேனும் வெற்றி பெறும்.
ஆகவே, பசுவதையைத் தடுப்பதற்கு வழி வருகின்றபோது அதனை ஆதரிப்பது நம் அனைவரதும் தலையாக கடமையாகும்.