முன்மாதிரித் தலைவர்கள் இல்லாத உலகமாயிற்று
Share
முன்மாதிரி என்ற தமிழ்ச் சொல் மிகவும் பெறுமதி வாய்ந்தது. எனினும் இன்றைய சமகாலத்தில் முன்மாதிரி என்ற சொற்பதத் துக்காக சுட்டுவிரல்கள் காட்டக்கூடிய எண் ணிக்கை மிகக் குறைவு.
அதிலும் தேசத் தலைவர்கள் என்றிருப் போரில் அந்தத் தலைவனைப்பார் அவரின் உயர்ந்த மனிதநேயத்தைப்பார் என்று சொல்வதற்கு யாருளர் என்று ஏங்க வேண்டியுள்ளது.
முன்னைய காலத்தில் மன்னர்கள் மக்களுக்காக வாழ்ந்தனர்.
அதிலும் தமிழ் மன்னர்களின் நேர்மைத் திறத்துக்கு உலகில் யாரும் ஈடில்லை எனலாம்.
ஆம், மனுநீதிச்சோழ மன்னன் ஒரு பசுவின் துயர் துடைக்க தன் மகனையே தேர்க்காலால் மிதித்துக் கொன்றான் எனில், அவனிடம் இருந்த நீதிநெறி எத்துணை உயர்வான தென்பதை யாம் கூறி எவரும் தெரிய வேண்டியதில்லை.
இதுபோல தமிழ் மன்னர்கள் பலரை நாம் சுட்டிக் காட்ட முடியும்.
அஃது ஒரு காலம் என்றால், இல்லை. கடந்துபோன காலங்களில் தங்களை அர்ப் பணித்த தலைவர்கள் பலர் இருந்துள்ளனர்.
மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, டாக்டர் அப்துல்கலாம் என்றவாறு தியாகம் நிறைந்த தேசத் தலைவர் களைச் சுட்டி நிற்க முடியும்.
ஆனால் இப்போதுள்ள சமகாலத்தில், நல்ல தலைவர்களுக்கும் பஞ்சம். அவர் நல்ல தலைவர் என்று சொல்லக்கூடிய மக்களுக்கும் பஞ்சம் என்று வந்துவிட்டபோது எல்லாமும் ஐயத்துக்குரியதாயிற்று.
நல்லதை நல்லது என்று சொல்ல வல்ல துணிவு ஒருவரிடமும் இல்லை என்றபோது நல்ல தலைவர்களை இனம் காண்பதும் கடினமே.
எதுவாயினும் நாட்டின் – தேசத்தின் தலைவர்களாக இருக்கின்றவர்கள் உணர்ச்சி வசப்படாமல் பொறுமைமிக்கவர்களாக இருக்க வேண்டும்.
இல்லையேல், அவர்களின் கருத்துக்கள் பொதுச் சட்டங்களை, பொது விழுமியங்களைத் தகர்த்தெறிந்து விடும்.
இதற்கு நல்ல உதாரணம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் அவர்கள் அண்மையில் கூறிய கருத்தாகும்.
அதாவது நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் பாராளுமன்றத்தைக் கூட்டமாட்டேன் என ஜனாதிபதி கூறியிருந்தார்.
இந்த நாட்டின் ஜனாதிபதி தனக்கு இருக்கக் கூடிய அதிகாரத்தை மேற்போந்த கருத் தினூடாகத் தெரிவிப்பதாக நினைத்திருக்கலாம்.
ஆனால் அதற்கு வேறு வழிகளும் வேறு சொற்பிரயோகங்களும் உண்டு.
மாறாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் பாராளுமன்றத்தைக் கூட்டமாட்டேன் என்று கூறியதனூடாக நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் வழு ஏற்படுத்தப் படுகின்றது.
இத்தகைய சொற்பிரயோகங்கள் நீதிமன்றத்துக்கான உயர் மதிப்பை குறைப்பதாக இருந் தால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பங்கமாகும்.
எனவே முன்மாதிரியான தலைவர்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
இருக்கின்ற கட்டமைப்பையேனும் பாதுகாக்கின்ற அளவில் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய காலத்தில் வலியுறுத்தப்பட வேண்டிய விடயமாகும்.