முதலிடத்தில் சிவபூமி பாடசாலை சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம்
Share
சமூக சேவைகள் திணைக்களத்தால் 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுய அபி மான திட்ட ஆய்வில், யாழ்ப்பாணம் கோண்டாவிலில் அமைந்துள்ள சிவபூமி மனவிருத்தி பாடசாலை அகில இலங்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை நமக்கெல்லாம் மன நிறைவையும் பெருமையையும் தருவதாகும்.
செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சிவபூமி அறக்கட்டளை அமைப்பு ஈழத் திருநாட்டில் சமய, சமூகப் பணிகளை முன்னெடுத்து வரு கின்றமை உலகறிந்ததே.
அந்த வகையில் சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட சிவபூமி மன விருத்திப் பாடசாலை மனவளம் குன்றிய பிள்ளைகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.
மனவிருத்தி குன்றிய நிலையில் வீடுகளுக்குள் இருந்த பிள்ளைகளை வாரி அணைத்து அவர்களும் சாதனைக்குரியவர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை வழிப் படுத்தவும் ஆற்றுப்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டதே சிவபூமி மனவிருத்திப் பாடசாலையாகும்.
இலங்கையின் வரலாற்றில் அரச கட்டமைப்பால் கூட இயக்குவது கடினம் என்று கூறக்கூடிய சூழ்நிலையில்,
கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் கண் வைத்திய நிபுணர் குகதாசன் உள்ளிட்ட சமூகப் பற்றாளர்கள் மற்றும் கொடையாளர்கள் சேர்ந்து கோண்டாவில் மண்ணில் ஆரம் பித்த மனவிருத்திப் பாடசாலை மனவளர்ச்சி குன்றிய எத்தனையோ பிள்ளைகளின் வழித்துணையாக அவர்களை அரவணைக்கும் அன்புக்கரமாக விளங்குகிறது.
மனவளம் குன்றிய பிள்ளைகளையும் வளப்படுத்தி அவர்களையும் சாதனையாளர் களாக ஆக்க முடியும் என்பதை நிரூபித்த பெருமை சிவபூமி மனவிருத்திப் பாடசாலை க்கே உரியது.
ஆம், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் எங் கள் சிவபூமிப் பாடசாலைப் பிள்ளைகள் பங் கேற்று சாதனை படைத்து நம் மண்ணுக்கு உலகப் புகழ் பெற்றுத்தந்தனர்.
வீட்டு வாசலின் எல்லை தாண்ட முடியாமல், வீட்டின் கதவோரம் நின்று எட்டிப் பார்த்து நாங்கள் வெளியில் செல்ல முடியுமா?
என்று ஏங்கிய பிள்ளைகளை கிறிஸ் நாட்டுக்கு, அவுஸ்திரேலியாவுக்கு, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்ற மாபெரும் சாதனைக்குச் சொந்தமான கோண்டாவில் சிவபூமி மன விருத்திப் பாடசாலை அகில இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சுய அபிமானி திட்ட ஆய்வில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை என்பதற்குள்,
அந்தப் பாடசாலையின் கட்டமைப்பு, நிர்வாகத் திறன், அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்புடனான தியாகம் என அத்தனையும் வெளிப்பட்டு நிற்கின்றது.
இஃது ஒட்டுமொத்த இலங்கையின் அங்கீகாரமாயினும் எம்மைப் பொறுத்த வரை இந்த வெகுமதி கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலைக்குக் கிடைத்த இறைவனின் ஆசி என்பதே நம் முடிவு.