மலையகத் தமிழ் மக்களுக்கு எழுதும் அனுதாபக் கடிதம்
Share
எம் மலையகத் தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பினால் நீங்கள் அடைந்துள்ள சொல் லொணாத் துயர் கண்டு நாமும் மிகுந்த வேதனை அடைகிறோம்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உச்சிக் கதிரவன் நடுவானில் இருந்து வீழ்ந்தது போல் குறைந்த வயதில் திடீரென மரணித்தமை உங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற் படுத்தவே செய்யும்.
என் செய்வது. இறப்பு ஒன்றுதான் மனிதனின் பிறப்புரிமை என்றாயிற்று.
அந்தப் பிறப்புரிமையை நாம் ஏற்றுத்தானாக வேண்டும்.
அதுவே இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமும் நியதியுமாகும்.
எனினும் மரணித்தவர் தன் வாழ்நாளில் மக்களுக்கு ஆற்றிய பணிகளால் அவரின் நாமம் இறப்பைக் கடந்தும் மக்கள் மனங்களில் நிலைபெறுகிறது.
இந்த வகையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மலையகத் தமிழ் மக்களாகிய உங்களின் மனங்களில் என்றும் வாழ்வார் என்பதில் ஐயமில்லை.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மலையகத் தமிழ் மக்களின் மீட்பராக இருந்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் அன்புப் பேரன்.
அமரர் தொண்டமானின் அரசியல் வாரிசாக மலையத் தமிழ் மக்களின் அரசியல் விவ காரங்களை முன்னெடுத்துச் சென்றவர் அவர்.
அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் இந்த நாட்டின் மிகப் பெரும் அரசியல் தலைவர். மலையகத் தமிழ் மக்களாகிய உங்களின் வாழ்வுக்காக அவர் ஆற்றிய பணியை, அரசியல் திறத்தை யாம் சொல்ல வேண்டியதில்லை
அத்துணை ஆற்றல்மிகு தலைவராக தொண்டமான் விளங்கினார்.
ஈழத் தமிழ் மக்களின் உரிமை சார் விடயங்களிலும் அவர் காட்டிய கருசனை என்றும் மறப்பதற்கில்லை.
இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களை பேரினவாத ஆட்சியாளர்கள் வஞ்சம் தீர்க்க நினைத்தபோது அவரைக் காப்பாற்றி இந்தியா செல்வதற்கு செளமியமூர்த்தி தொண்டமான் உதவினார் எனும்போது அதற்குள் அவரிடம் இருந்த; எம் மீதான அன்பும் பாசமும் எத்துணை உயர்வானதென்பதை உணர முடியும்.
ஆம், அரசியல் களநிலைமைகளை சாதக மாக்கி மலையகத் தமிழ் மக்களாகிய உங்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் உங்களின் வாழ்வியலை மேம்படுத்துவதிலும் அமரர் தொண்டமான் ஆற்றிய பணிகள் உயர்வானவை.
அவரின் அத்தகைய பணிகளுக்கு பக்க பலமாக – ஓர் இளைஞனாக நின்று பணி யாற்றிய அமைச்சர் ஆறுமுகன் தொண்ட மான் சமகால அரசியலில் கடுமையாகப் போராட வேண்டியவராக இருந்தார்.
இந்த நாட்டின் இனவாத ஆட்சி அதிகாரங்கள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மிகுந்த உபாதையைக் கொடுத்திருக்கலாம்.
அவர் தன்னை நம்பிய மலையத் தமிழ் மக்களுக்காகத்தன் இறுதி மூச்சுவரையில் பணியாற்றினார்.
அவரின் உடல் இன்று அக்கினியில் சங்கமமாகும் இவ்வேளையில், எங்கள் உறவுகளாகிய உங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.