மதுப் பழக்கத்தில் இருந்து முற்றாக விடுபடுங்கள்
Share
கொரோனாத் தொற்றுக் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த வீழ்ச்சி நிலை உலகம் முழுமைக்கும் பொருந்துமாயினும், அபிவிருத்தியின் உச்சத் தில் இருக்கக்கூடிய நாடுகள் எப்படியும் தங்களின் பொருளாதார தளர்ச்சியை நிவர்த்தி செய்து விடும்.
ஆனால் இலங்கை போன்ற வறிய நாடுகளால் பொருளாதார வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதென்பது முடியாத காரியமே.
இவை நாடுகள் பற்றியதாக இருக்க, நாட்டு மக்களின் நிலைமை எவ்வாறாக இருக்கும் என நோக்கும்போது,
பொருளாதார வசதியுடைய மக்களுக்கு கொரோனா சூழமைவு உடனடியான பொருளா தாரப் பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது.
இதேபோல நடுத்தர மக்கள் ஓரளவுக்கு ஈடு கொடுப்பர். ஆனால் வறிய மக்களின் நிலைமை என்பது மிக மோசமாகவே இருக்கும்.
இப்போது கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வறிய மக்களின் ஜீவனோபாய பொருளா தாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தும் சமூக சேவையாளர்களின் பரோப காரமும் அரசாங்கத்தின் கொடுப்பனவுகளும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு முண்டு கொடுக்கிறது.
ஆனால் கொரோனாத் தொற்று நிலைமை நீடிக்கும் சந்தர்ப்பத்தில், சமூக ஆர்வலர்களால் வழங்கப்படுகின்ற நிவாரணப் பணிகள் ஒரு கட்டத்தில் நின்று விடும்.
அதேபோல் அரசாங்கத்தின் கொடுப்பனவுகளும் போதுமானதாக இருக்க மாட்டாது.
இத்தகைய நிலைமை ஏழைக் குடும்பங்களில் வறுமை தலைவிரித்தாடுவதற்கு வழி வகுக்கும்.
இங்கு பெரும்பாலான ஏழைக் குடும்பங்களில் உழைப்பாளர்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் தமது உழைப்பின் பெரும்பங்கை குடிப்பதற்காகச் செலவழித்து விடுகின்றனர்.
இதனால் எடுக்கின்ற வருமானத்தில் பெரும் பகுதி குடியிலும் குழப்பத்திலும் போய் முடிய வீட்டில் மனைவி, பிள்ளைகள் பசி கிடக்கும் பரிதாப நிலைமை ஏற்படும்.
எனவே இப்போது ஏற்பட்டிருக்கின்ற கொரோனா தொற்றுக் காலத்தில், உழைப்பதில் மிச்சம் பிடித்து நெருக்கடியைச் சமாளிக்க ஏழைக் குடும்பங்கள் தயாராக வேண்டும்.
இதற்காக மதுப்பழக்கத்தை, புகைத்தலை முற்றாகக் கைவிடுகின்ற முடிவை ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தின் தலைவர்களும் உழைக்கும் ஆண்களும் எடுத்தாக வேண்டும்.
இந்த முடிவை எடுக்கத் தவறுகின்ற ஒவ்வொரு கணமும் வறுமை உங்களை நாடி வேகமாக ஓடி வரும்.