போலிக்குள் வீழ்ந்து கிடக்கும் சிங்கள மக்கள் பாவங்கள்
Share
நாட்டை அபிவிருத்தி செய்வதையோ அன்றி நாட்டிலுள்ள ஏழை மக்களின் வாழ்வாதா ரத்தை உயர்த்துவதையோ இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எவரும் செய்திலர்.
இதற்குச் சமகால ஆட்சித் தரப்பும் விதி விலக்கல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இலங்கை ஆட்சியாளர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு நாட்டின் அபிவிருத்தியோ மக்களின் வாழ்வாதாரமோ பிரச்சினையன்று.
மாறாக தேர்தல் அரசியல், குடும்ப அரசியல், தங்களுக்கான பொருளாதாரவளம் இவையே அவர்களின் சிந்தனையாக உள்ளது.
இதற்காக நாட்டு மக்களைத் தம்வசம் வைத்திருக்கும் நோக்கோடு தென்பகுதி அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன.
சிங்கள மக்களைத் தம் வசம் வைத்திருப்பதற்காகப் பெரும்பான்மை சார்ந்த முதன்மை அரசியல் கட்சிகள் இலங்கை ஒரு பெளத்த நாடு. அது சிங்கள மக்களுக்கு உரியது.
இங்கு சிறுபான்மை மக்கள் வந்தேறு குடிகள். அவர்களுக்கு இங்கு ஆட்சி அதிகாரமோ பெரும்பான்மை மக்களுக்கு ஈடான உரிமைகளோ கிடையாது என்றவாறு இனவாதத் தீயை வளர்த்து வருகின்றனர்.
இலங்கை பெளத்த நாடு. சிங்களவர்களுக்கு உரியது என்ற எண்ணப்பாட்டிலிருந்து சிங்கள மக்கள் எக்காலத்திலும் விலகாத வண்ணம் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இதில் முக்கியமான விடயம் வரலாற்றைத் திரிவுபடுத்தி எழுதுகின்ற மிக மோசமான செயலாகும்.
ஆம், மாணவர்களுக்கான வரலாற்று நூல்களில்; தமிழர்களின் வரலாறு, அவர்கள் ஆட்சி செய்த காலகட்டங்கள் என அத்தனையும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு,
இலங்கை பெளத்த சிங்கள நாடு என்பதை நிரூபணம் செய்வதற்கான வகையில் வர லாறுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதனால் சிங்கள மாணவர்களும் பெளத்த மதம் சிங்கள இனம் என்ற வக்கிர உணர் வோடு இருப்பதற்கான வகையில் பயிற்றப்பட்டுள்ளனர்.
ஒரு நாட்டு மக்களை இனவாதப் பேயும் மதவாதத்தீயும் ஆக்கிரமித்துக் கொள்ளும் போது, அந்த மக்களால் அதிலிருந்து இம்மியும் விலக முடியாமல் போக, ஒரு எல்லையில் அந்த நாடு உலக மாறுதல்களுக்கும் முன்னேற்றங்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் வறுமையிலும் நோயிலும் உழன்று கொள்ளும்.
இத்தகைய நிலைமையை ஏற்படுத்தவே பேரினவாதம் கனன்று கொண்டிருக்கிறது.
என்ன செய்வது எதிர்காலத்தைப் புரிந்து கொள்ள மறுக்கின்ற சிங்கள மக்கள் தமிழர்கள் என்றாலே விடாதே! என்று கூறுகின்ற கயமைத்தனத்துக்குள் வீழ்ந்து கிடக்கின்றனர்.
காலச் சூழல் மாறும்போது நிலைமைகளும் மாறும். அப்போது கடல் திடலாகவும் திடல் கடலாகவும் மாறுகின்ற இயற்கையின் நியதி இங்கும் நடந்தாகும்.