பொருளாதாரப் பாதிப்புக்களை ஈடாக்குவது எங்ஙனம்
Share
கொரோனாத் தொற்றுப் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 20ஆம் திகதி அமுல்படுத்தப் பட்ட ஊரடங்குச் சட்டம் ஒரு மாத காலத்தை நெருங்குமளவுக்கு வந்துவிட்டபோதிலும் ஊரடங்கு உத்தரவு இன்னமும் தளர்த்தப்படாமல் உள்ளது.
அதிலும் கொரோனாத் தொற்று அதிகமாக உள்ள ஆறு மாவட்டங்களில் இடைசுகத்துக் கேனும் ஊரடங்கைத் தளர்த்த முடியாத கட்டத்தில் நிலைமை இருக்கிறது.
இந்நிலையில் இம்மாதம் 20ஆம் திகதியில் இருந்து குறித்த ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைப் படிப்படியாகத் தளர்த்துவதற்கான ஏற் பாடுகள் இருப்பதான தகவல்களும் வெளிவந்துள்ளன.
எதுஎவ்வாறாயினும் கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்கான ஒரே வழி பொதுமக்கள் வீடுகளில் இருப்பதுதான் என்ற அடிப்படையில் ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமுல் படுத்துகின்ற நிலைமை உள்ளது என்பதையும் ஏற்றுத்தானாக வேண்டும்.
அதேநேரம் நீண்ட நெடுநாட்களாய் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதனால் கொரோனாத் தொற்றைத் தடுக்க முடியுமாக இருந்தாலும் நெருக்கடியான வீடுகளில் வசிப்பவர்கள், தொடர் மாடிகளில் குடியிருப்பவர்கள், சிறிய வீடுகளில் கூட்டுக் குடும்பமாக இருக்கக்கூடியவர்களின் நிலைமை பரிதாபத் துக்குரியதாகும்.
இதுதவிர, வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத காரணத்தினால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் என்பதற்கு அப்பால் ஊரடங்கு உத்தரவால் நாளாந்த தொழில் வாய்ப்பை இழந்தவர்கள் மிகப்பெரியதொரு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்ற சூழமைவும் ஏற்பட்டுள்ளது.
அதாவது நாளாந்தக் கூலித் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் தமக்கு ஏற்பட்ட வருமான இழப்பை எந்த வகையிலும் ஈடுசெய்ய முடி யாது.
இத்தகைய இக்கட்டான நிலையில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு இயல்பு நிலைமை ஏற் படுகின்றபோது நாளாந்த வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு சீவனோபாயம் நடத்துகின்றவர்கள் மிக இறுக்கமான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்ற சூழமைவு ஏற்படும்.
இத்தகைய நிலைமைகள் பாதிக்கப்பட்டவர்களைத் தவறான முடிவுகளுக்கு ஆட்படுத்தும் என்பதால் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்த தரப்பினர் தொடர்பில் அரசாங்கம் அதீத கவனம் எடுக்க வேண்டும்.
தவிர, மேற்போந்தவர்களின் பொருளாதார இழப்பை எங்ஙனம் ஈடுசெய்ய முடியும் என்பது பற்றிய சிந்தனைகளும் அவசரமாக மேலெழுவது அவசியமாகும்.