பரம்பொருளின் பெரும் புகழை பாடிப் பணிதலன்றி….
Share
நல்லூர்க் கந்தப் பெருமானுக்கு இன்று கொடியேற்றம்.
நல்லூர் முருகனின் திருவிழா என்பது தமிழ் மக்களின் பெருவிழா.
சமய பேதமின்றி அனைத்து மக்களும் பங்கேற்கின்ற நல்லூர்க் கந்தனின் திருவிழாவுக்குச் சென்று வந்தாலே அது பெரும் பேறு என்று கருதுபவர்கள் நாம்.
இதற்கு மேலாக, அலங்காரக் கந்தனைக் கண்டால் போதும். அதுவே மானிடப் பிறப்பின் பெரும் பேறு என்று வாழ்கின்ற நம்மவர்கள் ஏராளம்.
தில்லையில் பிறந்தால் முத்தி. திருவாரூரில் வாழ்ந்தால் முத்தி. காசியில் இறந்தால் முத்தி. திருவெண்ணாமலையை நினைத்தால் முத்தி என்பது நம் முன்னோர்களின் கணிப்பு.
அப்படியானால் நம் நல்லூர் முருகனுக்கு என்ன பெருமை என்று யாரேனும் கேட்டால், நல்லூர்க் கந்தனின் திருவீதியைச் சுற்றி வந்தால் முத்தி என்பேன்.
அந்தளவுக்கு நல்லூர்த் திருவீதி தெய்வீகத் தன்மை பொருந்தியது.
நல்லூர் முருகன் நம்மைக் காப்பாற்றுவான் நீவிர் எவரும் அஞ்சற்க! என்று தவத்திரு யோகர் சுவாமிகள் கூறி வைத்தது முழுதும் உண்மை.
ஆம், எத்தனையோ துன்ப துயரங்கள் வந் துற்ற போதிலும் எமக்கு நம்பிக்கை தந்தவன் அவன். நல்லூர் முருகன் இருக்கிறான். அவன் எங்களைக் காப்பாற்றுவான் என்ற ஒரே நம்பிக்கையே எங்களை ஆற்றுப்படுத்துகிறது.
அந்த நல்லூர்க் கந்தனின் திருவிழாவைக் காண வேண்டும் என்று தொழும் அடியார்க்கு அவன், திருவீதி உலா வந்து ஆறுதலும் தேறுதலும் தருவான் என்ற நம்பிக்கை அனை வருக்கும் உண்டு.
இவை ஒருபுறமிருக்க, நேற்றைய தினம் நல்லூர்க் கந்தனிடம் சென்றேன். நான் உனை மறக்கவில்லை. நீ என்னை மறந்துவிடாதே என்பதைச் சொல்வதற்காக…
நல்லூரானின் கொடியேற்றத்துக்கு முதல் நாள் (நேற்று) வைரவப் பெருமான் வீதி வலம் வருவார். நல்லூரில் முருகனின் படைத்தளபதி வைரவரே.
வைரவர் வீதி உலா வருகின்ற பூசை வழி பாட்டில் கலந்து கொண்ட அனைத்து அடியார் களும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.
எவரும் ஒருவரோடு ஒருவர் கதைக்க வில்லை. இதைப் பார்த்தபோதுதான் நல்லூர் முருகன் ஆலயத்தில் எழுதப்பட்டுள்ள
பரம்பொருளின் பெரும் புகழைப் பாடிப் பணிதலன்றி பிறவார்த்தை யாதொன்றும் பேசற்க ஆலயத்துள் என்ற வாசகம் பளிச்சிட்டது.
அட, ஆலயத்துக்குள் பிறவார்த்தை பேசக் கூடாது என்பதற்காகவும் இந்த முகக் கவசம் உதவுகிறது என்று நினைத்தபோது,
அவன் தன்ர அலுவலில் மிகத் தெளிவாக இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆகவே இனிமேல் எவரும் ஆலயங்களில் தேவையற்ற வார்த்தைகளைப் பேசாதிருப் போமாக.