பட்டலைகிறது உலகம் பக்குவமாய் உறங்குங்கள்
Share
கொடிய போரினால் வன்னிப் பெருநிலப் பரப்பில் உயிர்நீத்த உறவுகளே! இன்று மே 18. நீங்கள் உறக்கம் கலைந்து உங்கள் உறவுகளின் வருகைக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மண்ணில் காத்திருப்பீர்கள்.
அத்தனை உறவுகளும் உங்களைச் சந்திக்க முடியாத கால சூழல் இப்போது இருக்கிற தாயினும் உங்கள் நினைவோடு ஏற்றப்படும் நினைவுச் சுடர் தரும் ஒளியில் நாங்கள் அனைவரும் சங்கமிப்போம்.
பதினொரு ஆண்டுகள் நிறைவாகி விட்டன வாயினும் உங்கள் உயிர் பறிப்புக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
அந்தோ! இன்றுபோல் இருக்கிறது எங்களைக் காப்பாற்றங்கள் என்று நீங்கள் இரு கரம் உயர்த்தி உலகத்திடம் கேட்டது.
மனித உரிமைகள் பற்றியும் சமத்துவ வாழ்வு பற்றியும் மாநாடு வைக்கும் உலகம் ஈழத் தமிழினத்தின் விடயத்தில் மட்டும் மெளனமாய் நின்றது.
எந்தத் தீங்கும் இழைக்காத எம் தமிழ் உறவுகளே! உங்களைப் பாதுகாக்க வேண்டிய சொந்த நாடு உங்களைச் சங்காரம் செய்தது.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற எந்தப் பேதமையும் இன்றி தமிழ் இன அழிப்பாக நடத்தி முடித்த கொடுஞ் செயலில் பல்லாயிரமாக உங்களை இழந்தோம்.
அந்தோ! உங்களின் இழப்பு அநாதைக் குழந்தைகளாய், விதவைக்கோலமாய், பிள்ளை களை இழந்து வாடும் முதியவர்களாய் சொல்லி மாளா அவலங்களாய் நம் மண்ணில் அடை யாளமிட்டுள்ளன.
இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்று அஞ்சற்க, நீதி வழங்க வேண்டிய மன்னர்கள் குற்றம் இழைத்தவர்களாய் நின்றால், தெய்வம் தான் நீதியைத் தந்தாக வேண்டும்.
தெய்வம் நின்றறுக்கும் என்பதுதான் நியதி என்று கண்டோம்.
ஆம், 2009 மே 18 இற்குப் பின்பான மே – 18 என்றாலே தென் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.
முள்ளிவாய்க்காலின் அவலத்தை உணர்த்து கின்ற அறிகுறி இதுவென்று உணராததால், இன்று உலகமே முடங்கிக் கிடக்கிறது.
ஆம், கொரோனா என்ற கொடிய நோயால் உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களைப் புதை க்க ஜே.சி.பி கொண்டு குழி தோண்டுகின்றன.
ஓ! வெற்று வெளியில் உறவுகள் இன்றி உங்களைப் புதைத்தபோது யாரடா? என்று கேட்டிருந்தால், இன்று அமெரிக்கா தலை நிமிர்ந்து நின்றிருக்கும்.
இலங்கைக்குப் போராயுதம் வழங்கிய சீனா உலகப் பகை நாடாய் மாறியிருக்க மாட் டாது.
ஆம், யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இந்த அகிலத்தையே ஸ்தம்பிக்க வைத்தது உங்களின் அழுகுரலும் நீங்கள் எழுப்பிய அவலக்குரலும் என்பதே உண்மை.
ஆகையால் நீங்கள் அமைதியாக உறங் குங்கள், உங்களுக்கான நீதியை இறைவன் நிச்சயம் வழங்குவான்.
அதுவரை எங்கள் கண்ணீரும் நாங்கள் ஏற்றுகின்ற தீபமுமே உங்களுக்கான எங்களின் ஆத்ம ஈடேற்ற கிரியை.