தொழிலாளர்களைச் சுரண்டினால் கன்மவினை திரண்டெழும்
Share
சர்வதேச தினங்கள் என்ற கட்டமைப்புகள் எழுகை பெறுவதற்குச் சாயலாக இருந்தவை சமய நிகழ்வுகளும் தினங்களுமாகும்.
உலகில் உள்ள அனைத்துச் சமயங்களும் வருடம் முழுமையிலும் தமக்கான தினங் களைப் பிரகடனப்படுத்தி உள்ளன.
சுருங்கக் கூறின் சைவ சமயத்தில் தைப்பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறுவதற்கானது. நாயன்மார்களின் குருபூசை குருவைப் போற்றுவது.
ஆடி அமாவாசையும் சித்திராப் பெளர்ணமியும் இப்பூவுலகில் வாழ்ந்து மறைந்த தந்தை தாய்க்கான பிதிர்க்கடன் செய்வதைக் கட்டாயப்படுத்துவது.
ஏனைய விரதங்கள் பாவபழிகள், ஊழ்வினைப்பயன்கள், கன்ம வினைகள் என்பவற்றைத் தீர்ப்பதற்கானது.
இந்தச் சாயலிலேயே சர்வதேச தினங்களும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன.
சர்வதேச ஆசிரியர் தினம் குருவைப் போற்று வதற்கானது.
அன்னையர் தினம் பெற்ற தாயை வணங்குவதற்கானது. காதலர் தினம் காதலின் மகிமையை உணர்த்துவதற்கானது.
இதேபோல் சர்வதேச தொழிலாளர் தினம் உழைப்பாளர்களின் உரிமையை வலியுறுத்து வதற்கும் பாதுகாப்பதற்குமானது. அந்த நாள் தான் மே தினம்.
ஆண்டான் அடிமை என்ற மானிய காலத்து சமுதாய நிலைமைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு அனைவரும் மனிதர்கள் என்ற சிந்தனை உயர்ந்து நின்றபோது, தொழிலாளர்களின் உரிமை என்ற விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.
அன்று தொழிலாளர்களின் உரிமை என்ற விடயம் கவனிக்கப்பட்டாலும் அந்தக் காலத் தில்; உழைக்கும் ஏழை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஊழ்வினைகளாகத் திரண்டு இன்றுவரை இந்த உலகப் பிரபஞ்சத்தை வதைக்கிறது என்பதை நாம் யாரும் மறந்து விடக் கூடாது.
ஆக, சர்வதேச தொழிலாளர் தினத்தை இன்று நினைவுபடுத்துகின்ற அதேநேரம் தனித் தும் ஒருமித்தும் நாம் வாழ்நாளில் செய்கின்ற அநீதிகள், அக்கிரமங்கள், வஞ்சனைகள் என அத்தனையும் ஒன்றுதிரண்டு நம்மையும் நம் சந்ததியையும் தண்டிக்கவே செய்யும்.
ஆகையால் இன்றைய மே தினத்தில் ஊர்வலங்கள் நடத்த முடியவில்லையாயினும் உழைப்பாளர் படையைக் கெளரவிக்க முடிய வில்லையாயினும்,
ஊழ்வினை என்றும் கன்ம வினை என்றும் நம் முன்னோர்கள் கூறிய உண்மையை உணர்ந்து; உழைப்பாளர்களை வதைக்காமல், அவர்களை நலினப்படுத்தாமல், அவர்களின் ஊதியத்தை உடனுக்குடன் வழங்கி மனிதம் என்ற உயர் மாண்பை எஞ்ஞான்றும் போற்ற வேண்டும்.
இதுவே நம்மை, நம் சந்ததியைக் காப்பாற்றும் என்ற உண்மையை இந்நாளில் உணர்ந் தால்,அஃது நூறு மே தினத்துக்கு சமமானது என்பது நம் தாழ்மையான கருத்து.