தேர்தல் வெற்றிக்காக மக்களை ஏமாற்றி விடாதீர்கள்
Share
கொடிய கொரோனாத் தொற்று ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் முடக்கி விட்டுள்ளது.
இந்த முடக்கம் எப்போது எடுபடும் என்பது தெரியாத நிலையில் இலங்கையில் கொரோனா நிலைவரம் திருப்தி தருவதாக இல்லை என்றே கூற வேண்டும்.
கொரோனாவைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டாலும் அதனைக் கட்டுப்படுத்துவது சாதாரணமான விடயமல்ல என்பதை உணர முடிகின்றது.
இந்நிலையில் கொரோனாவுக்கான முடக்கம் என்று தணியும் என்பதை நிறுதிட்டமாகக் கூற முடியவில்லை.
இவை ஒருபுறமிருக்க, பொதுத் தேர்தலை நடத்தி முடிப்பது என்ற விடயமும் இங்கு முதன்மை பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.
காலப்பிழை போல பாராளுமன்றைக் கலைத்துவிட, தேர்தலுக்கான திகதி அறிவிக் கப்பட்ட கையோடு கொரோனாத் தொற்று உலகம் முழுவதையும் உலுப்பத் தொடங்கி விட்டது.
இந்நிலையில் பொதுத் தேர்தலை உரிய திகதியில் நடத்த முடியவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
உரிய திகதியில் தேர்தலை நடத்த முடியவில்லை என்பதற்கு அப்பால் தேர்தல் திகதி களைப் பிற்போட்டாலும் கொரோனா ஆபத்து இன்னமும் நின்றபாடில்லை எனும் போது தேர் தலை நடத்துவதும் கடினமான காரியமாகவே இருந்து வருகிறது.
எனினும் ஜுன் மாதத்திலேனும் தேர்தலை நடாத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைவரும் வந்துள்ளனர் என்பதையும் உணர முடிகின்றது.
பாராளுமன்றக் கலைப்பு, வேட்புமனுத் தாக்கல், தேர்தலுக்கான திகதி அறிவிப்பு என்ற கட்டங்கள் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் ஒன்றுகூடுகின்ற சூழ்நிலைகள் தேவையற்றதாக இருந்தன.
ஆனால் தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்துவிட்டால், வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம் செய்தாக வேண்டும்.
அதாவது தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளிட்ட தேர்தல் பிரசாரங்களைச் செய்வதன் ஊடா கவே தத்தம் கொள்கை, கோட்பாடு என்பவற்றை அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக் களும் மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியும்.
ஆனால் இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் பொதுமக்களை அழைத்து கூட்டங்களை நடத்துவதோ, சந்திப்புக்களை ஏற்படுத்துவதோ சாத்தியமான விடயமல்ல.
ஆக, கொரோனாத் தொற்று என்ற சூழமைவுக்குள் தேர்தலை நடத்தும்போது, தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு தரப்பு பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
இஃது ஜனநாயகத் தன்மைக்கு ஏற்புடைய தன்று. ஆகையால் கொரோனாத் தொற்று என்ற இக்கட்டான சூழமைவுக்குள் பொதுத் தேர்தலையும் நடத்தியாக வேண்டும் என்ற தவிர்க்க முடியாத நிலைமை இருக்கும் பட்சத்தில்,
எவரும் பொதுமக்களை ஏமாற்றுகின்ற பாவச் செயல்களைச் செய்யக்கூடாது என்பதே நம் தாழ்மையான கருத்து.
அதாவது கொரோனாத் தொற்று இருக்கின்ற போதும் நடக்கின்ற பொதுத் தேர்தல் ஜனநாயகத்தின் செழுமைக்கான உத்திரவாதமாக அமைவது அவசியமாகும்.