தேர்தல்கள் முடிந்தால் யாவும் கற்பனையே
Share
அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் பேசிக் கொள்வதுண்டு.
அதேநேரம் அரசியலின் இயங்குநிலை காரணமாகப் பலரும் அரசியலை வெறுக்கத் தலைப்பட்டனர்.
இவ்வாறு அரசியல் குறித்து மக்களிடையே எழுந்த அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்காக கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலிப் பத்திரிகையில் ஒரு விளக்கக் கட்டுரையை வரைந்தார்.
அதில் அரசியல் பிழையன்று. அரசியலில் ஈடுபடுவோர் சிலர் அறமின்றி நடந்து கொள்வ தால் அஃது அரசியலுக்கு இழுக்கைத் தந்து விடுகிறது.
மற்றும்படி அரசியல் செம்மைப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் வாழ்வு செழுமை பெறும்.
எனவே மக்கள் அரசியலை ஒதுக்காமல் அரசியலுக்குப் பொருந்தாதவர்களை ஒதுக்க வேண்டும் எனக் கருத்துரைத்தார்.
கலைஞர் கருணாநிதி வரைந்த விளக்கம் மீது ஈழத் தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் நம் தாழ்மையான கோரிக்கை.
ஏனெனில் நம்மில் பலர் அரசியலை வெறுக் கின்றனர். இந்த அரசியல் தேவையில்லை என்று ஒதுங்குகின்றனர்.
இவ்வாறு ஒதுங்குவதால் அரசியல் நின்று போகுமென்றால் பரவாயில்லை.
ஆனால் அரசியல் ஒருபோதும் நின்று போக மாட்டாது. அதுவே உலகம் முழுமையிலும் ஆட்சி செய்கிறது.
எனவே அரசியல் தொடர்பில் நாம் செழுமை பெற வேண்டும். இல்லையேல் அறமற்ற அரசி யல் கோலோச்சத் தலைப்படும்.
அதேநேரம் எல்லா விடயங்களும் போல அரசியலிலும் அதர்மமும் தர்மமும் உண்டு.
அரசியலில் தர்மம் வெல்ல வேண்டுமா? அல்லது அதர்மம் வெல்வதா? என்பதைத் தீர்மானிப்பது பொதுமக்களே!
பொதுமக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒருபோதும் அதர்மம் வெல்வதை விரும்பமாட்டார்கள்.
அப்படியானால், பல சந்தர்ப்பங்களில் அதர்மமான அரசியல் வென்று விடுகிறதே என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம்.
அவ்வாறு கேட்டால், அதற்குக் காரணம் அரசியல்வாதிகள் கூறுவதை மக்கள் அப்படியே நம்பி விடுவதுதான்.
உண்மை எது? ஏமாற்று நாடகம் எது? என் பதை எவரும் உரசிப் பார்ப்பதில்லை.
இதன்காரணமாக மக்களுக்குச் செழுமை தரக்கூடிய அரசியல், விம் கலந்த பசும் பால் போல எங்கள் மண்ணில் கிடக்கிறது.
என்ன செய்வது தேர்தல் வருகிறது என் றாலே அரசியல் நாடகங்கள் அரங்கேறி விடு கின்றன.
கதை, வசனம், தயாரிப்பு, நடிப்பு என்பன வற்றின் பால் பொதுமக்கள் இரசிகர்கள் ஆகி விடுகின்றனர்.
அந்தோ! தேர்தல் முடிந்தபின் யாவும் கற்பனை என்ற அறுவடையை மட்டுமே இரசிகர் கள் எடுத்துச் செல்கின்றனர். என்ன செய்வது.