தமிழ் மக்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்
Share
தேர்தல் முடிந்து விட்டது. எங்கள் பணி நிறைவடைந்தாயிற்று என்றிருந்தால், மீண்டும் நாம் படுகுழி நோக்கியே விழ வேண்டிவரும்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்ற வர்கள் தமிழ் மக்களுக்காகத் தம்மை முற்று முழுதாக அர்ப்பணிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அதைவிட்ட கேடு வேறு எதுவு மாக இருக்க மாட்டாது.
இதைநாம் கூறும்போது, அப்படியானால் நாங்கள் என்னதான் செய்வது என்று நீங்கள் கேட்கலாம்.
இங்குதான் தமிழ் மக்களாகிய நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவர்களாக இருக் கின்றோம்.
ஆம் தேர்தல் முடிந்து விட்டது. நாம் யாரை ஆதரித்தோமோ அவர்கள் வென்று விட்டார் கள் என்று திருப்தியடைந்தால், அதனால் ஏற்படப் போகும் பாதகம் கொஞ்சமாக இருக் காது.
எனது கட்சி வெற்றி பெற்று விட்டது. நான் ஆதரித்தவருக்குப் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்து விட்டது.
யாரைத் தோற்கடிக்க வேண்டுமென்று நினைத்தோமோ அவர் தோற்றுவிட்டார். அல்லது நாம் தோற்கடிக்க வேண்டுமென்று நினைத்தவர் வென்றுவிட்டார்.
அவருக்கு எதிராகச் செயற்படுவதுதான் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கான எமது வேலைத்திட்டம் என்றெல்லாம் நாம் நினைப்போமாக இருந்தால்,
நாம் யாரை ஆதரித்தோமோ; யாரை பாராளுமன்றத்துக்கு அனுப்பினோமோ அவர்களே நம் இனத்துக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்து விடுவர்.
ஆக, நடைபெற்ற தேர்தலின்போது யாரை ஆதரிப்பது நல்லது என்று நினைத்து செயற்பட் டோமோ அத்தகையவர்கள் தமது பாராளு மன்றப் பதவிக்காலத்தில் எவ்வாறு செயற்படு கிறார்கள் என்பதைக் கண்காணித்து அவர்கள் விடுகின்ற தவறுகளைச் சுட்டிக்காட்ட நாம் தயாராக இருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக நம் தமிழ் இளைஞர்கள் இது விடயத்தில் விழிப்பாக இருந்தால் மட்டுமே நம் இனம் உய்வு பெற முடியும்.
அன்புக்குரிய தமிழ் இளைஞர்களே! நீங்கள் அரசியல் கட்சிச் சார்புடையவர்களாக ஒருபோதும் இருக்காதீர்கள். தமிழ் மக்களுக்கான – தமிழ் இனத்துக்கான மிகப் பெரும் பலமாக இருங்கள்.
தமிழ் மக்களுக்காக யார் விசுவாசமாகச் செயற்படுகிறார்களோ அவர்களைத் தேர்தலில் ஆதரிப்பது அவர்களைக் கொண்டு எமது உரிமையை வென்றெடுப்பது என்பதாக நம் காரியம் இருக்க வேண்டும்.
இதைவிடுத்து நீங்கள் கட்சி சார்ந்தீர்களா யின் உங்கள் கட்சி செய்வதெல்லாம் சரி என்ற நிலைப்பாட்டுக்கு வந்து விடுவீர்கள்.
இங்குதான் கட்சி அரசியல் மேலெழுகிறது. ஆகையால் தமிழினப் பற்றோடு இருங்கள். சரி பிழை என்பன பட்டவர்த்தனமாகத் தெரிய வரும்.