தமிழ் அரசியல் கைதிகளின் விபரத்தை வெளியிட வேண்டும்
Share
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மகிந்த ராஜபக்வைச் சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை சமர்ப்பித்தனர்.
அதேசமயம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை பிரதமரிடம் சமர்ப்பித் தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரம் அடங்கிய பெயர்ப்பட்டியலை யார் கொடுத்தனர் என்பது இங்கு முக்கிய விடயமன்று.
மாறாக தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை மேற்குறித்த இரண்டு தரப்பும் பிரதமர் மகிந்த ராஜபக்விடம் ஏன் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களிடம் எழுந்துள்ள ஐயம்.
அதாவது தமிழ் அரசியல் கைதிகளின் விபரம் உட்பட அவர்கள் சிறைவாசத்தை அனு பவிக்கும் ஆண்டுகள் என அத்தனை விடயங்களும் அரசாங்கத்திடம் உண்டு.
அதிலும் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் அந்த விபரங்கள் நிச்சயம் பேணப்படும்.
அப்படியானால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்று அரசாங்கத் திடம் கேட்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினதும் கடமையாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அரசாங்கத்துக்குத் தெரியாதது போல வும் தாம் அந்த விபரங்களை வைத்திருப்பது போலவும் மேற்குறித்த சம்பவங்கள் அமைந்துள்ளன.
அரசாங்கத்திடம் இருக்கக்கூடிய தமிழ் அரசியல் கைதிகளின் விபரத்தை இன்னொரு தரப்பு அரசாங்கத்திடம் வழங்குகிறது எனில்,
அந்தத் தகவல்கள் எங்ஙனம் பெறப்பட்டன. அவை முழுமையானவையா என்ற கேள்வி கள் எழவே செய்யும்.
அதாவது காணாமல் போனவர்களின் பட்டியலை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதென்பது வேறு. தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை கையளிப்பதென்பது வேறு.
அதாவது காணாமல்போனவர்களின் விப ரங்கள் தங்களிடம் இல்லை என்று அரசாங்கம் கூற முடியும்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் காணாமல் போனவர்களின் விபரங்களை அரசாங்கத் திடம் கையளிப்பது ஏற்புடையது.
மாறாக தமிழ் அரசியல் கைதிகளின் அத்தனை விபரங்களும் அரசாங்கத்தின் கைவசம் இருக்கும்போது, நாங்களாக ஒரு பட்டியலைக் கொடுக்கும்போது அது மிகப்பெரும் சிக்கல் களை ஏற்படுத்தவே செய்யும்.
இதை இன்னும் விளக்குவதாயின், கூட்டமைப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வழங்கிய பட்டியலின் பிரகாரம் தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்கிறது என எடுகோள் எடுத்துக் கொண்டால்,
வழங்கப்பட்ட பட்டியலில் தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெயர் விபரம் தவறவிடப் பட்டிருக்குமாயின் அவர்களின் விடுதலை சாத்தியமற்றுப் போகும்.
இவ்வாறான நிலைமை எத்தகைய தாக் கத்தை உருவாக்கும் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும்.
எனவே இரு தரப்பும் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த தமிழ் அரசியல் கைதிகளின் விபரப் பட்டியலை ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும்.
இதைச் செய்வதன் மூலம் அவற்றை அவர்களின் உறவுகள் செம்மை பார்க்க உதவும்.