Type to search

Editorial

தமிழர் தாயகத்தில் நந்திக் கொடியை பறக்கவிடுக!

Share

இன்றைக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய உடை என்பன தொடர்பில் ஒரு முக்கிய கலந்துரை யாடல் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிச னில் இடம்பெற்றது.

இதற்கான ஏற்பாட்டை வலம்புரி நாளிதழும் ராவயப் பத்திரிகையும் இணைந்து செய்திருந்தன.

தேசியக் கொடி, தேசிய கீதம் என்பன தொடர் பில் தமிழ் மக்களின் மனவெளிப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இதில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

கூடவே ராவயப் பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவனும் பங்கேற்றிருந்தார்.

தேசியக் கொடியில் இருக்கக்கூடிய பெளத்த சிங்கள மேலாதிக்கம் இந்த நாட்டின் இன, மத ஒற்றுமைக்குக் குந்தகமாக அமையும் எனச் சுட்டிக் காட்டப்பட்டது.

தேசிய கீதத்தைப் பொறுத்தவரை அதை எழுதிய ஆனந்த சமரக்கோன் தனது இறுதிக் காலத்தில் கவலை வெளியிட்டிருந்தார் என்ற கருத்தும் இங்கு முன்வைக்கப்பட்டது.

எனினும் தேசிய கீதம் பற்றிப் பிரஸ்தாபித்த அவ்வேளை தமிழிலும் தேசிய கீதம் பாடு கின்ற சூழ்நிலை இருந்தது என்பதோடு இதனை நிறுத்திக் கொள்ளலாம்.

இப்போது தேசிய கீதத்தை சிங்கள மொழி யில் மட்டுமே பாட வேண்டும் என்பதாக அறி விக்கப்பட்டுவிட்டது.

தமிழ் இனம் மீது கொண்ட வக்கிரத்தால் இப்படியயாரு முடிவை சமகால ஆட்சிப்பீடம் எடுத்திருக்கிறது.

சரி, தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என்று நினைத்தால், இல்லை தமிழ் இனம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு இந்த நாட்டின் தேசியத்தில் எந்தப் பங்கும் வழங்கக்கூடாது என்ற அடிப்படையில்; கடந்த அமைச்சரவைப் பதவியேற்பின் போது கண்டி இராச்சியத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டன.

கண்டி இராச்சியக் கொடியில் தமிழ் முஸ் லிம் இனத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய் யும் வர்ணங்கள் இருக்கவில்லை. மாறாக பெளத்த சிங்களத்தை முழுமைப்படுத்தும் வாளேந்திய சிங்கக் கொடியே கண்டி இராச்சி யக் கொடி எனக் கூறப்பட்டு பறக்கவிடப்பட்டன.

என்ன செய்வது இவற்றை யாரிடம் போய்ச் சொல்ல முடியும்.
பரவாயில்லை நாட்டின் தேசியக் கொடி தொடர்பில்கூட தமிழ் மக்கள் இன்னமும் திருப்தி கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் எங்களுக்கான அடையா ளத்தை பிரதிநிதித்துவம் செய்யாத கண்டி இராச்சியக் கொடி அமைச்சரவைப் பதவியேற் பின்போது பறக்கவிடப்பட்டன எனில், அதன் உள்நோக்கம் என்ன என்பது புரியக்கூடியதே.

எதுவாயினும் யாழ்ப்பாண இராச்சியத்தை பிரதிநிதித்துவம் செய்வது நந்திக் கொடியாகும்.
எனவே தமிழர் தாயகத்தில் நடக்கின்ற ஒவ் வொரு விழாக்கள் மற்றும் நிகழ்வுகளின் போது நந்திக் கொடியை ஏற்றுவதும் அவ ற்றை விழா இடங்களில் பறக்கவிடுவதும் ஏற் றுக் கொள்ளப்பட வேண்டும்.

இதுவே அனைத்து இனங்களையும் மதிக்கக்கூடிய அரசுக்கு அழகாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link