தமிழர்களின் அவலத்தை கொரோனாவால் மறைக்காதீர்கள்
Share
கொடிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து நிற்கிறது.
கொரோனா மிகப் பயங்கரமான தொற்று நோய் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.
உலகில் கொரோனா மட்டுமே பிரச்சினை என்றிருக்கக்கூடிய மக்களுக்கு அது மட்டுமே இடைஞ்சலாகும்.
ஆனால் இலங்கைத் தமிழர்களின் நிலைமை அதுவல்ல.
அவர்களுக்கு பேரினவாதத்தால் இழைக்கப்பட்ட அநீதிகள், இழப்புகள், துன்பங்கள் என்பனவற்றுடன் கொரோனா ஆபத்தும் சேர்ந்து இரட்டிப்பான கஷ்டத்தை – துன்பத்தைக் கொடுக்கின்றன.
இதை நாம் கூறும்போது நீங்கள் கூறுவதற்கு ஏதேனும் உதாரணம் உண்டா? என்று கேட்டால் ஆம், காணாமல் போனவர்களின் உறவுகள் கொரோனா என்ற கொடிய நோய் தரக்கூடிய ஆபத்தை சிந்திக்கின்ற அதேநேரம் காணாமல்போன தன்பிள்ளை எப்போது வருவான் என்ற ஏக்கத்தையும் தாங்கி நிற்கின்றனர்.
இதுதவிர, உழைத்துத் தரக்கூடிய பிள்ளையை வன்னியில் இழந்ததன் காரணமாக இப்போது வீட்டுச் சீவியத்துக்காக ஏங்க வேண்டியுள்ளதே என்ற தீராக் கவலை.
இதற்கு மேலாக தாயை இழந்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் தங்கள் தந்தை எப்போது சிறையில் இருந்து வருவார் என்று தவிக்கின்றன. இஃது ஆனந்தசுதாகரனின் குடும்பத்து நிலைமை மட்டுமல்ல, இப்படி எத்தனையோ தமிழ்க் குடும்பங்களை சுட்டிக் காட்ட முடியும். இவ்வாறாக எம் தமிழ் இனத்தின் நிலைமை இருக்கும் போது,
இலங்கையில் கொரோனா மட்டுமே பிரச்சினை என்பது போல காட்டிக் கொண்டு தமிழ் மக்களின் அவலத்தை, அவர்கள் படும் பதை பதைப்பை, ஏக்கத்தை எவரும் மூடி மறைத்து விடக்கூடாது.
கொரோனா என்ற கொடிய நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியம் என்பதோடு தமிழ் மக்களின் அவலத்தை நிவர்த்தி செய்வதும் முக்கியமானதாகும்.
எனினும் தமிழ் மக்களின் ஆழ் மனத் துன்பங்கள் பற்றி எவரும் கருத்திலெடுப்பதாகத் தெரியவில்லை.
இதற்கு நல்ல உதாரணமாகப் பின்வரும் விடயத்தைக் கூறலாம்.
அண்மையில் பாடசாலை மாணவர்கள் இணைய வாயிலாக பிரதமர் மகிந்த ராஜபக்விடம் சில வினாக்களை எழுப்பினர்.
நாங்கள் பாடசாலைக்குச் சென்று எப்போது படிப்பது, விளையாடுவது. சிறுவர்களாகிய நாங்கள் வெளியில் சென்று மகிழ்வாக ஓடித் திரிவது எப்போது என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.
இவ்வாறு கேள்வி எழுப்பிய மாணவர்களில் நம் தமிழ் மாணவர்களும் அடங்குவர்.
பிரதமர் அங்கிள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரனை விடுவித்து தாய் இல்லாத அந்த சின்னஞ்சிறுசுகளுக்கு ஆறுதல் கொடுக்க மாட்டீர்களா? என்று எந்த மாணவரும் கேட்கவில்லை. எவரும் சொல்லிக் கொடுக்கவும் இல்லை.
இங்குதான் தர்மம், புண்ணியம், பிறரையும் நேசிக்கும் பக்குவம் பிறழ்வடைகின்றன.
இவற்றைச் சரிப்படுத்தினால், கொரோனா போன்ற ஊழிக்காலத்துப் பேரழிவுகளும் உலகை விட்டேகும்.