செய்ய வேண்டிய உதவிகளை உரிய காலத்தில் செய்யுங்கள்
Share
வட பகுதியில் உள்ள வயல் நிலங்களைக் கட்டாக்காலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு வேலி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை இந்த நாட்டுக்குப் புதியதாக இருக்கலாம். முன்பெல்லாம் வேலி அடைக் காமல் நெல் விதைத்து அறுவடை செய்த நம் நிலைமை இப்போது இல்லை.
யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை தாங்கமுடியாதென் றாயிற்று.
மாடுகளைக் கட்டுப்படுத்தும் விடயம் இன் னமும் கோரிக்கை நிலையில் உள்ளதேயன்றி, செயற்பாட்டு நிலைக்கு அது வரவில்லை.
நெல் விதைத்த பின்னர் வயலில் நிற்கின்ற மாடுகளைப் பிடிக்கின்ற அதிகாரம் மட்டுமே தமக்குள்ளதென்கிறது கமநல சேவை நிலையம்.
சரி, பிரதேச சபைகளிடம் கேட்கலாமென் றால், வீதியில் மற்றும் பொது இடங்களில் நிற்கின்ற மாடுகளைப் பிடிக்கின்ற உரிமை மட்டுமே தமக்குள்ளதெனப் பிரதேச சபைகள் கூறுகின்றன.
ஆக, இப்போது வயலுக்குள் நிற்கின்ற மாடுகளைப் பிடிப்பதற்கு கமநல சேவை நிலையம் செல்கிறது. மாடு வயலெல்லாம் ஓடித் திரிந்து வீதிக்கு வந்து சேர்கிறது. இனி அந்த மாட்டை பிரதேச சபை பிடிக்க வேண்டும்.
வீதியில், பொது இடத்தில் நிற்கின்ற மாட்டை பிரதேச சபை பிடிக்க எத்தணிக்கும்போது மாடு வயலுக்குள் இறங்கிவிட, பிரதேச சபை யால் எதுவும் செய்ய முடியாது போகிறது.
இவ்வாறாக கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கின்ற அதிகாரம் அங்குமிங்குமாக இருக்க, அந்தக் கருமம் ஒருபோதும் சாத் தியப்படாமல் போய்விடுகிறது.
இந்நிலையில் வேலி அடைத்து வயல் விதைக்கின்ற முயற்சி நடக்கிறது. வயலுக்கு வேலி போடுவதென்பது ஊரைச்சுற்றி வேலி அடைப்பதற்கு ஒப்பானது.
இருந்தும் என்ன செய்வது, வயல் விதைத் தால் அதனைப் பாதுகாத்தாக வேண்டும் என்ற அடிப்படையில் வயல் விதைத்தவர்கள் பெரும் செலவு செய்து வேலி அடைக்கின்றனர்.
வேலி அடைக்கின்ற செலவைப் பார்க்கும் போது சுண்டங்காய் காற்பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற உபதேசமே எங்கள் பிரதேசத்து நெல் விதைப்புக்கும் பொருந்து கிறது.
நிலைமை இதுவாக இருக்கையில், அண் மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விவசாய அமைச்சர்; 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முட்கம்பிகள் 50 வீத மானியத்தில் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறும்போது ஐயா! வேலி அடைக்க வேண்டிய நேரம் இது.
எனவே இப்போதுதான் முட்கம்பி தேவை என்று எடுத்துரைப்பதற்கு நம்மிடம் எவரும் இருந்திருக்கவில்லை.
இதுபோல பல விடயங்களைச் சுட்டிக் காட்ட முடியும். எதுவாயினும் கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நடைமுறைச் சாத்தியமான செயற்றிட்டத்தை ஏற்படுத்துவதுதான் ஒரே வழி.