கொரோனா வந்துற்றபோதும் பேரினவாத பேய் அகலாததென்னே!
Share
இராம – இராவண யுத்தம் நடக்கிறது. கும்பகர்ணன் இந்திரசித்து எனப் பெரும் போர் வீரர்கள் மாண்டு போயினர்.
போர்க்களத்தில் அத்தனை ஆயுதங்களையும் இழந்த இராணவன் வெறுங்கையோடு நிற்கிறான்.
நிராயுதபாணியுடன் போர் தொடுப்பது அறமல்ல என்பதால் இன்று போய் போர்க்கு நாளை வா என்கிறார் இராமர்.
உடன் பிறந்த சகோதரன், பெற்றெடுத்த மகன், உற்றார், உறவுகள் என அனைவரையும் இழந்த இராவணன் தன் தோல்வி கண்டு ஜனகன் மகள் தன்னை ஏளனப்படுத்தி விடு வாளோ என்று கவலைப்பட்டானாம். எப்படி இருக்கிறது நிலைமை.
இராவணனின் அந்தச் சபல புத்தி இலங்கையின் பேரினவாதிகளிடம் இன்னமும் இருக்கவே செய்கிறது.
ஆம், நேற்று முன்தினம் 13ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் செம்மணியில் அனுஷ்டித்தது.
2009ஆம் ஆண்டு மே மாதம் முற்றுப் பெற்ற கொடிய யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்தனர்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்தேறிய தமிழின அழிப்பு இந்த உலகம் உள்ளவரை மறக்க முடியாத கொடுஞ் செயல்.
இக்கொடும் போரில் உயிரிழந்த எம் உறவுகளை நினைவு கூருவதைக்கூட படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர் எனும்போதுதான் இராவணனின் நினைப்பு வருகிறது.
இப்போது கொரோனா எனும் கொடிய நோயினால் உலகம் முழுவதும் அல்லோல கல்லோலப்படுகிறது.
அந்தத் துன்பத்தை இலங்கை மக்களும் அனுபவித்து நிற்கின்றனர்.அதிலும் படைத் தரப்பையும் கொரோனா துரத்தித் துரத்தித் தாக்குகிறது.
நிலைமை இதுவாக இருக்கையில், கொரோனாவுக்குரிய பாதுகாப்புடன் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அதட்டவும் வெருட்டவும் படையினர் முற்பட்டனர் என்றால், இதைவிட்ட சிறுமைத் தனம் வேறு எதுவுமில்லை எனலாம்.
உலகத்தில் நடக்கின்ற பேரழிவைக் கண்டேனும் மெய்யுணர்வு பெற்றிருந்தால், செம்மணியில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குப் படையினர் தங்கள் மரியாதையைச் செலுத்தி இருப்பர்.
அவ்வாறு செலுத்தியிருந்தால், அந்தோ பேரினவாத நிலைமைகள் தணிந்தன என்று தமிழ் மக்கள் நினைத்திருப்பர்.
ஆனால் கொரோனாவை சாட்டாக வைத்து உங்களைத் தனிமைப்படுத்துவோம் என்று படையினர் அதட்டுகிறார்கள். இங்கு நாம் படையினரிடம் கேட்பது, உங்கள் தனிமைப்படுத் தலை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்புக்கு மட்டும் செய்யாதீர்கள்.
மாறாக ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் ஒன்றாகத் தனிமைப்படுத்துங்கள்.
உங்களின் தனிமைப்படுத்தல் எங்களுக்கு தாயகம் என்றல்லவோ பொருள்படும்.