குடியிருந்த கோயில்களை முதியோர் இல்லத் தில் விடாதீர்கள்
Share
கொடிய கொரோனா தொற்றினால் உலகம் முழுமைக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு சொல்லி மாளா.
பொருளாதாரம், கல்வி, மருத்துவம் என அத்தனை துறைகளிலும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று மனிதர்களை உடல், உள, சமூக, ஆன்மிக நிலைகளில் பாதிக்கச் செய்துள்ளது.
அதாவது உலக சுகாதார ஸ்தாபனம் சுகம் என்பதற்குக் கூறிய வரைவிலக்கணத்தின் நான்கு அங்கங்களும் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளன.
அதிலும் வெளிநாடுகளில் முதியவர்கள்படும் துன்பத்தைக் கேட்டால், இதயம் கருகிப் போகும். அந்தளவுக்கு அவர்கள் அந்தரித்து நிற்கின்றனர்.
பிள்ளைகளால் முதியோர் இல்லங்களில் விடப்பட்ட வயோதிபப் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் தங்களைப் பார்க்க வரமாட்டார்களா? என்ற ஏங்குகின்றனர்.
அதிலும் உலக நாடொன்றில் முதியோர் இல்லத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று என்ற சந்தேகம் எழுந்ததுதான் தாமதம்,
அங்கு பணியில் இருந்தவர்கள் அத்தனை பேரும் முதியோர் இல்லத்தை விட்டு தலை தெறிக்க ஓடி விட,
அங்கிருந்த முதியோர்கள் மாடியில் இருந்து விழுந்தும் உணவின்றிப் பசி கிடந்தும் உயிரி ழந்து போனதான தகவல்கள் மானிட வாழ்வை வெறுக்க வைப்பன.
அதிலும் வெளிநாடுகளில் உள்ள எங்கள் புலம்பெயர் உறவுகளில் ஒரு குறிப்பிட்ட எண் ணிக்கையினர் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பித்து விட்டு, அவர் களைத் திரும்பிப் பார்க்காமல் மறந்து போயினர் என்ற செய்திகளைக் கேட்டபோதுதான், குடியிருந்த கோயில்களை கைவிட்டு விடாதீர்கள் என்று எழுத முனைந்தோம்.
ஆம், வெளிநாடு என்ற மாயை பலரை வேதனைப்பட வைத்தே கொன்று விட்டது.
பிள்ளைகள் அத்தனைபேரும் வெளிநாட்டில். சொந்த மண்ணில் இருந்த வயோதிபப் பெற்றோர்களை வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்று ஒரு சில வருடங்கள் தங்களோடு தங்க வைத்து, பின்னர் முதியோர் இல்லங்களில் ஒப்படைத்து விட்டனர்.
என்ன செய்வது வெளிநாட்டு வாசிகளுடன் கதைக்கவும் பேசவும் முடியாமல்; சொந்த ஊரில் இருந்த உறவுகளின் முகம் தெரியாமல்; பிள்ளைகளின் குரலைக்கூடக் கேட்க முடியாமல் தீராத் துன்பச் சுமையோடு மரணத்தின் வரவுக்காகக் காத்திருக்கும் துன்பம் சாதா ரணமானதல்ல.
இந்தப் பாவத்தை சந்ததி முழுமைக்கும் அனுபவித்தாலும் தீர்ந்து போகாது.
ஆகையால் அன்புக்குரிய புலம்பெயர் உறவுகளே! உங்களில் யாரேனும் உங்கள் பெற் றோர்களை முதியோர் இல்லங்களில் விட்டிருந்தால் அவர்களை மீட்டெடுத்து உங்களோடு வைத்திருங்கள்.
வெளிநாட்டு வாழ்வு அதற்கு இடம்தர வில்லை என்றால், சொந்த ஊருக்கு அனுப்பி அவர்கள் வாழ்ந்த மண்ணில், அயலோடும் உறவோடும் ஊரோடும் வாழ வழி செய்யுங்கள்.
இஃது உங்களுக்குக் கோடி புண்ணியத்தைத் தரும். தயவுசெய்து நீங்கள் குடியிருந்த கோயிலை – தெய்வங்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடாதீர்கள்.