கவனமாக இருக்க வேண்டிய அஞ்ஞாதவாச காலம்
Share
கெளரவர்களின் நிட்டூரத்தால் பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டி யதாயிற்று.
13 ஆண்டுகளில் ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமாகும்.
அஞ்ஞாதவாசம் என்பது எவருக்கும் தெரியாமல் மறைந்திருக்கின்ற காலம்.
இக்காலத்தில் பாண்டவர்களை யாரேனும் கண்டுவிட்டால், மீண்டும் 12ஆண்டுகள் வன வாசத்தை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி.
ஆக 12 ஆண்டுகள் என்ற வனவாச காலத்தை விட ஓர் ஆண்டு அஞ்ஞாதவாச காலத்தை மிகவும் கவனமாகக் கடக்க வேண்டும் இது இதிகாசச்சரிதம்.
இப்போது கொரோனா தொற்றினால் கடந்த மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் இலங்கை மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர்.
என்ன செய்வது மனிதரைக் கண்டால் எட்ட நிற்க வேண்டியதொரு சூழ்நிலையை இயற்கை விதித்துள்ளது.
அவ்வாறு யாரேனும் வெளியில் செல்வதாக இருந்தால்கூட பொலிஸ் அனுமதி பெற்றாக வேண்டும் என்பதுடன் முகக்கவசம் அணிந்து செல்வதும் கட்டாயமாகும்.
இவையயல்லாம் கொரோனா எனும் கொடிய தொற்று நோயில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள்.
இவை ஒருபுறமிருக்க, நாளை ஏப்ரல் 20 ஆம் திகதியில் இருந்து ஊரடங்கு உத்தரவைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நாட்டில் கொரோனாத் தொற்று உள்ள ஏழு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 18 மாவட் டங்களில் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்துவ தென அரசாங்கம் முடிவு செய்துள்ளது
இதில் வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.
இங்குதான் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதாவது ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும்போது, மக்கள் முண்டி யடித்து வெளியில் வருகின்ற சந்தர்ப்பங்கள் உண்டு.
இவ்வாறான முண்டியடிப்புகள் இதுகாறும் நாம் வீடுகளில் இருந்து கொரோனாத் தொற்று வராமல் பாதுகாத்ததை பாழாக்கி விடுவதாக இருக்கக் கூடாது என்பதுதான் நம் தாழ்மை யான கருத்து.
அதாவது ஊரடங்கு அமுலில் இருந்த ஒரு மாத காலத்தை 12 வருட வனவாசமாகக் கருதினால், ஊரடங்கு தளர்த்தப்பட்ட முற்பகுதி அஞ்ஞாதவாசத்துக்கு ஒப்பானதாகும்.
ஆம், ஊரடங்கு முடிந்து விட்டது என்ற நினைப்பில்-மகிழ்வில் கொரோனாத் தொற்றை எவரும் மறந்து விடக்கூடாது.
தப்பித் தவறி யாருக்கேனும் கொரோனாத் தொற்று ஏற்படுமாயின் மீண்டும் ஊரடங்கு அமுலாவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
ஆகையால் ஊரடங்குக் காலத்தைவிட ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில், மனிதர் களில் இருந்து மனிதர்கள் மறைந்தும் எட்டித்தும் இருப்பதே உத்தமமாகும்.
ஆகையால் நாம் அனைவரும் மிக அவ தானமாகச் செயற்பட வேண்டிய காலம் இதுவாகும்.