உலகம் வந்தாங்கு உங்களை அஞ்சலிக்கும்
Share
அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தை தேய்க்கும் படை
என்றார் வள்ளுவர்.
வள்ளுவர் தந்த குறளறம் இன்று உலகம் முழுமைக்கும் செல்லுபடியாகி உள்ளது.
விஞ்ஞானம், அறிவியல், அணுவாயுதம், விண்வெளி ஆய்வுகள், வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய விதப்புரைகள் என அகிலத்தை ஆராய்ந்த நாடுகள் இப்போது சுதந்திரமாய் சுவாசிக்க முடியாதவாறு முகக்கவசம் அணிந்து நடமாடுகின்றன.
அந்தோ! அண்டசராசரமெல்லாம் சுற்றிப் பயணம் செய்தவர்கள் கண்ணுக்குத் தெரி யாத கிருமியை கணக்கிட்டு அறிய முடியாமல் போயிற்று.
அணுவாயுத அதட்டல்கள், வறிய நாடுகளில் ஏழைகளின் உயிர் பிரிவதை வேடிக்கை பார்க்கும் எக்காளச் செருக்குகள். சிறுபான்மை மக்களின் உரிமை பற்றிச் சிந்திக்காத சின்னத்தனங்கள் என அத்தனைக்கும் ஆப்பு வைப்பதாக கொரோனா வைரஸ் கிருமி வல்லரசுகளின் கழுத்தை நெரித்து மூச்சை அடக்கித் தள்ளி விழுத்தி காலால் மிதிக்கிறது.
அந்தோ! கிருமி நாசினியையேனும் மருந் தெனக் கொடுங்கள் என்று மாறாட்டம் காணும் அளவில் கொரோனா வைரஸ் வல்லவனுக்கு வல்லவனாய் நின்று மார்தட்டுகிறது.
அண்டை நாட்டை நம்பினோம். பொறுத் திருங்கள் காத்தருள்வோம் என்றனர். உயிர் பிரிந்தபின் பொறுமையால் என்ன பயன் என்று கொரோனா எழுந்து நின்று கேட்கிறது. பாரதமே பதில் சொல் என்று.
இந்த நாடு எமக்கு என்ற கர்வத்தால் முள்ளி வாய்க்காலில் கதறக் கதறக் கொன்றனரே அது கண்டு இந்த உலகம் என்ன செய்தது.
இப்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள் என்று மன்றாடுகின்றன.
முள்ளிவாய்க்கால் கொடுமைக்கு மருந்தில்லையயனில், உலகத்து ஏழைகளுக்கு உணவு இல்லையயனில், அப்பாவிக் கைதி களுக்குச் சிறைக்கதவுகள் திறக்கப்படா தெனில், சிறுபான்மை இனங்களுக்கு உரிமையில்லை எனில், கொரோனாவுக்கும் இவ் வையகத்தில் மருந்தில்லை என்றுணர்க.மருந்து கால் மதி முக்கால் என்பதுதான் மூத்த குடித் தமிழன் தரணிக்குத் தந்த தத்துவக் கருத்து.
மதி என்பது அறிவு. அறிவு என்பது அறத்தைக் காக்கும் போர் வாள்.
எங்கெல்லாம் தர்மம் மீறப்படுகிறதோ! எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் நசுக்கப்படு கின்றனரோ! அங்கெல்லாம் அறிவு எனும் போர் வாள் அறத்தைக் காப்பாற்றக்களம் புக வேண்டும்.
அது நடக்காதவரை இப்படியும் நடக்குமா என்று உலகம் வியக்கும் அதிசயங்கள் சர்வ சாதாரணமாய் நடந்தேறும்.
இதுவே உண்மை. இந்த உண்மையைப் புரியாத கூட்டமொன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்க ஓடித் திரிகிறது. கொடுமை கொடுமை கொரோனாவிலும் மிகக் கொடுமை நினைவேந்தலைத் தடுப்பது.
தடுப்பது எங்கள் அதிகாரம் என்று மார்தட்டினால் பரவாயில்லை. முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எங்கள் உறவுகளை உலகம் வந்தாங்கு அஞ்சலிக்கும். இது என்றோ நடந்தாகும்.