ஆற்றாது அழுத கண்ணீரோ அகிலத்தைப் புரட்டுகிறது
Share
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்றார் வள்ளுவர்
வள்ளுவர் கூறிய குறளின் தத்துவம் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டி யதாகும்.
இங்கு யார் யார் வாய்க் கேட்பினும் என்பது எவை எழுகை பெற்றாலும் அதற்கான உண்மைப் பொருளைக் கண்டறிவதே அறிவு ஆகும் எனப் பொருள் தரும்.
அந்த வகையில், உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து நிற்கின்ற கொரோனாத் தொற்று இத்துணை தூரம் வியாபித்து மனித உயிர்களைக் காவு கொள்கிறது எனில், இது ஏன்? நடக்கிறது என்ற உண்மைப் பொருளை நாம் அறிந்தாக வேண்டும்.
விண்வெளியில் சஞ்சரிக்கக்கூடிய விஞ்ஞானம் ஒருபுறம், மனித உடல் கூற்றியல் மருத் துவத்தின் உச்சம் மறுபுறமாக இருக்கின்ற போதிலும் கொரோனாக் கிருமிக்குத் தடை விதிக்க முடியாத அளவில் விஞ்ஞான மருத்துவ உலகம் திணறுகிறது.
அதுமட்டுமல்ல; எத்தனையோ மருத்துவர்கள், விஞ்ஞானிகள் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி இறந்து போயுள்ளனர்.
இதற்கு மேலாக, உலக வல்லரசு என்று மார்தட்டும் அமெரிக்கா கொரோனாவினால் சின்னாபின்னப்பட்டு நிற்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி பதட்டமடைந்தவராக கிருமிநாசினியைக் கொரோனாத் தொற்று நோயாளர்களுக்கு மருந்தாகக் கொடுக்கலாமா என்று பரிசோதனை நடத்த வேண்டும் என்கிறார்.
இந்தக் கருத்தை வேறு எவர் கூறியிருந் தாலும் இந்த உலகம் கெக்களம் கட்டிச் சிரித்திருக்கும்.
ஆனால் சொன்னவர் அமெரிக்க ஜனாதிபதி. அதிலும் கொரோனாத் தொற்றினால் அமெரிக்கா ஆடி நிற்பது அவரைக் கடும் கோபப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தா விட்டாலும் தன்னோடு சீண்டுகிறவரை யாவது அடித்து நொருக்கி தன்னை ஆற்றுப்படுத்த வேண்டும் என்ற மனநிலையில் அமெ ரிக்கா அதிபர் ட்ரம்ப் இருப்பதனால், அவர் கூறிய கருத்துப் பற்றி எவரும் வாய் திறந்திலர்.
இவை ஒருபுறமிருக்க, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சிகள் வெற்றியளித்துள்ளதாக வந்த பாராட்டுக்களை மீளப் பெறுகின்ற அளவில், கொரோனாத் தொற்று இலங்கையில் சன்னதம் ஆடத் தலைப்பட்டுள்ளது.
அதிலும் படைத்தரப்பை பதம் பார்க்கின்ற அளவில் கொரோனா வேகம் கொண்டிருப்பது, புதிய சிக்கல்களை ஆட்சியாளர்களுக்குக் கொடுக்கக் கூடியதாக உள்ளது என்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆக, இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்க்கும்போது; அல்லல்பட்டு ஆற்றாது அழுகின்ற மானிடத்தின் அவலக்குரல் உலகெங்கும் கேட்கிறது.