அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
Share
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என சிலப்பதிகாரம் போதித்து நிற்கிறது.
எங்கும் எதிலும் அறத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தைக் கூறுவதற்காக இளங்கோ அடிகள் அறம் கூற்றாகும் என்றார்.
அரசியல் பிழைத்தோர் என்று இளங்கோ அடிகள் சுட்டி நிற்பதற்குள் இருக்கக்கூடிய பேருண்மையை உணர்தல் அவசியம்.
அரசியல் என்பது பொதுமக்களைப் பிரதி நிதித்துவம் செய்வது. அரசியலில் இருந்து தான் நீதி, நியாயம், தர்மம் என்ற அனைத்தும் உற்பவமாகின்றன.
எனவே, அரசியல் ஒழுங்கற்றுப் போகுமாயின் அஃது மக்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய அத்தனை பண்பாட்டு விழுமியங்களையும் சிதைத்து விடும்.
அநீதி மேலேங்கும். அதர்மம் எழுந்தாடும். நன்மக்கள் துன்பப்படுவர். இஃது அழிவையும் அக்கிரமத்தையும் விளைவிக்கும்.
எனவேதான் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனச் சிலப்பதிகாரத்தினூடாக இளங்கோ அடிகள் வலியுறுத்தி நிற்கின்றார்.
இங்கு இளங்கோ அடிகள் மன்னராட்சியின் கால கட்டத்தில் நின்று இதனைக் கூறி யிருந்தாலும் ஜனநாயக ஆட்சியிலும் இளங்கோ அடிகள் செப்பிய அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற தத்துவம் சாலப் பொருந்துகிறது.
ஆம், ஜனநாயக அரசியல் என்பது முடியாட்சிக்கு மாற்றுத் தீர்வாக, மாற்றுத்தலை மையாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் அங்கும் பொய், புரட்டு, விசமப் பிரசாரங்கள், மக்களைத் தவறாக வழிப்படுத்துகின்ற மோசங்கள், ஊழல்கள், இலஞ்சங்கள் என ஏகப்பட்ட அதர்ம காரியங்கள் நடந்தாகின்றன.
இவ்வாறு அதர்ம காரியங்கள் நடக்கின்ற போதிலும் அவை அரசியலில் ஏற்றுக் கொள் ளப்பட்ட ஒழுக்கம் போல நினைக்கப்படுவது தான் கொடுமையிலும் கொடுமை.
உண்மையில் தர்மம் என்பது அரசியலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு அரசியலில் அகிம்சையை, தர்மத்தை நிலை நிறுத்திய பெரியவர்களை இன் றும் நாம் நினைவுபடுத்துகின்றோம்.
ஆக, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற விடயத்தை ஒவ்வொரு அரசியல் வாதியும் தம்முள் ஆழப்பதிவு செய்ய வேண்டும்.
அரசியல் என்றால் அங்கு தந்திரமே முதன் மையானது என்று எவர் நினைக்கின்றாரோ அவர் தனக்கான எதிர்கால அழிவைத் திட்ட மிட்டு விட்டார் என்று பொருள் கொள்ளலாம்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலை ஒரு கணம் திரும்பிப் பாருங்கள். இந்த நாட்டின் பிரதமராகவும் மிகப் பழமை வாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் இருந்த ரணில் விக்கிரமசிங்க படுதோல்வி கண்டார்.
அதுமட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சி ஒட்டு மொத்தத் தோல்வியைச் சந்தித்தது. தேசியப் பட்டியலில் கிடைத்த ஒரு ஆசனம் இல்லை யயன்றால் ஐக்கிய தேசியக் கட்சியின் பெயர் அஸ்தமனமாகி இருக்கும்.
இவ்வாறு ஒரு பெரும் கட்சி கந்தறுந்து காவடி எடுக்குமளவுக்கு வருவதற்குக் கார ணம் அந்தக் கட்சி சஜித் பிரேமதாஸவுக்குச் செய்த அநீதியும் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகமுமாகும்.
ஆக, ஐக்கிய தேசியக் கட்சியின் கதிகண்டு ஏனைய அரசியல்வாதிகள் தங்கள் கரு மத்தை அறத்துடன் ஆற்ற முன்வர வேண்டும் என்பதுதான் நம் தாழ்மையான கோரிக்கை.