அத்தியாவசியப் பொருட்களை அறாவிலைக்கு விற்காதீர்கள்
Share
இந்த உலகம் முழுவதையும் ஆண்ட மகா அலெக்சாண்டர் ஒரு நாள் தன்படைத் தளபதியை அழைக்கின்றார்.
நாளை என்னுயிர் பிரிந்து விடும். என் உயிரற்ற உடலை மயானத்துக்கு எடுத்துச் செல் லும்போது எனது இரண்டு கைகளும் வெளியில் தெரியக்கூடியதாக எடுத்துச் செல்லுங் கள் என்றார்.
நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாத தளபதி ஏன் மன்னா? என்று வினவுகின்றார்.
அதற்கு மகா அலெக்சாண்டர்; இந்த உலகம் முழுவதையும் ஆண்ட மகா அலெக்சாண்டரும் போகும்போது வெறுங்கையோடுதான் போகிறார் என்பதை இனியேனும் இந்த உலகம் புரிந்து கொள்ளட்டும் என்கிறார்.
மகா அலெக்சாண்டர் கூறியதையே பட்டினத்தடிகள் காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்கிறார்.
இப்போது அந்தத்தத்துவம் உணர்த்தப்படுகிறது.அண்மையில் ஒரு முகநூல் பதிவைப் பார்க்க நேர்ந்தது. அதில் நாங்கள் வாங்கி வைத்திருக்கின்ற அரிசி வயிற்றுக்கா வாய்க்கா என்பதை கொரோனாதான் தீர்மானிக்கும் என எழுதப்பட்டிருந்தது.
ஆம், நிலையாமை எனும் ஒரு பெரும் நிஜத்தை வாழும் மானிடத்துக்கு கொரோனா வைரஸ் எடுத்துரைக்கிறது.
இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கும் வல்லமையும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவு கணைகளையும் அணுக்குண்டுகளையும் தம்வசம் வைத்திருக்கின்ற நாடுகள் இப்போது தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாமல் இரண்டு இலட்சம் பேர் நம் நாட்டில் மரணிப்பர் என ஆருடம் கூறுகின்றன எனும்போது, நிலைமை எப்படி என்பது உணர்தற்குரியது.
இது மட்டுமல்ல இத்தாலி தேசத்துத் தன வந்தர்கள் தங்களிடம் இருக்கின்ற பணத்தை வீதிகளில் கொட்டி விட்டு, இந்தப் பணத்தால் எங்கள் குடும்ப உறவுகளைக் காப்பாற்ற முடியவில்லை.
பின்பு இது எதற்காக எம்மிடம் இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.ஆக, வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
என்ற வள்ளுவம் இறைபரம்பொருளின் ஆட்சியை நமக்குக் காட்டி நிற்கின்றது.
அன்புக்குரிய எம் வர்த்தகப் பெருமக்களே நீங்கள் வழங்குகின்ற சேவை அளப்பரியது. உயிர்காக்கும் உத்தமப் பணி அது.
இருந்தும் அரிசி, கோதுமை மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் நடை முறை விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இத்தகைய நிலைமைகளை வர்த்தகப் பெருமக்களாகிய நீங்கள் முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
எங்கள் மண்ணில் தனிநபர்களும் பொது அமைப்புகளும் புலம்பெயர் உறவுகளும் சமய நிறுவனங்களும் செய்து வருகின்ற இடர்கால உதவிகள் கண்டு நெகிழ்ந்திருக்கின்ற இந்த வேளையில்,
அவர்களின் அறப்பணியை போற்ற வேண்டிய நாம், அறாவிலையில் பொருட்களை விற் பனை செய்வது எந்த வகையிலும் தர்மம் ஆகாது என்ற உண்மையை உணர்ந்து செயற் படுவோமாக.