அச்சம் வேண்டும் அச்சம் வேண்டும்
Share
அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்றான் பாரதி.
பாரதியின் இந்த வீர முழக்கம் சுதந்திர வேட்கையின் பாற்பட்டது.
அச்சமே அடிமைத்தனத்தின் மூலவேர் என்பதைக் கண்டறிந்த பாரதி அச்சமில்லை என்று நெஞ்சுரம் கொடுத்தான்.
இங்கு அஞ்சாமை என்பது எவ்வளவு பலமோ அதே பலம் அச்சம் என்பதற்கும் உண்டு.
இதை நாம் கூறும்போது நீங்கள் யாரேனும் நெற்றிப்புருவத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
ஆனால் நாம் கூறுகின்ற கருத்தியலுக்கு ஆதாரம் வள்ளுவனிடம் உண்டு.
வள்ளுவனைப் பொறுத்தவரை சூழ்நிலைக் கேற்ப அஞ்சாமையும் அச்சமும் தேவை என்றார்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்என்பது வள்ளுவனின் முடிவு.
ஆம், அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சாமல் விடுவது பேதமை.
அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுவது அறிவின் வெளிப்பாடு.
எனவேதான் அச்சமடைய வேண்டியவற்றுக்கு அச்சம் கொள்ள வேண்டும் என்று கூறி னோம்.
இப்போது உலகம் முழுமையையும் கொரோனாத் தொற்று ஆட்டிப் படைக்கிறது.
இருந்தும் ஒரு நாட்டில் கொரோனாத் தாக்கம் இருக்கின்ற போதிலும் அந்த நாட்டின் மாகாணம் மாவட்டம் என்ற உள்ளூர் எல்லைகளுக்குள் அதன் தாக்கம் உச்சமாகவோ அன்றி இல்லாமலோ இருக்கலாம்.
இவ்வாறாக இருக்கின்ற நிலைமையில் எமது மாகாணத்தில் கொரோனாத் தாக்கம் இல்லை என்று கருதி அதுபற்றி நாம் அச்சமடையாமல் சாதாரண சூழ்நிலைபோல நடந்து கொள்வோமாக இருந்தால்,
அதைவிட்ட துன்பம் வேறு எதுவுமாக இருக்க முடியாது.
எனவே நாங்கள் வாழ்கின்ற இடத்தில் கொரோனாத் தாக்கம் இல்லை என்றோ அல்லது குறைவு என்றோ நினைத்துக் கொண்டு கண்டபாட்டில் நடந்து கொள்வோமாக இருந் தால் அதன் விளைவு பாரதூரமாக இருக்கும்.
எனவே நாளை 11ஆம் திகதியில் இருந்து ஊரடங்கு தளர்வு அமுலுக்கு வர இருக்கிறது.
இக்கால கட்டத்தில், கொரோனா என்ற கொடிய நோயின் அச்சத்தை நாம் மறப்போமாக இருந்தால், எங்கள் பகுதிகளிலும் கொரோனாத் தொற்று ஏற்படுகின்ற வாய்ப்பு உருவாகும்.
இதற்கு மேலாக, எதிர்வரும் தினங்களில் கொரோனாத் தொற்று அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் இங்கு கவனத்திற்குரியது.
ஆகையால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது என்பதை கொரோனா அச்சம் நீங்கி விட் டது என எவரும் கருதிவிடக் கூடாது என்பது நம் தாழ்மையான கோரிக்கை.