அக முரண்பாட்டு நோயினால் அவஸ்தைப்படும் தமிழ் அரசியல்
Share
முட்டையில் உள்வெடிப்பு ஏற்பட்டால் அது உயிர்ப்பைத் தரும். வீட்டுக்குள் உள்வெடிப்பு ஏற்பட்டால் அது அஸ்தமனத்தைத் தரும்.
ஆம், முட்டையின் உயிர்ப்பு என்பது உள் வெடிப்பில் இருந்து வெளிப்படுவது. முட்டைக் குள் இருக்கும் உயிர்தன் முகிழ்ப்புக்காக உள் உடைவை ஏற்படுத்தி ஜனனப்படுகிறது.
மாறாக முட்டை வெளியில் இருந்து உடைபடுமாயின் அது உயிர்ப்புக்கு உலை வைத்து விடும்.
எனவே முட்டையின் வெடிப்பு உள்ளிருந்து வர வேண்டும்.மாறாக வீட்டுக்குள் உடைவு ஏற்பட்டால் அது பிரிவைத் தரும்.
தசரதச் சக்கரவர்த்தியின் வீட்டில் குழப்பம் ஏற்பட்டபோது இராமர் காடேகினார். தசரதர் உயிர் துறந்தார்.
கைகேயி விதவைக் கோலம் பூண்டாள். இராமர் இருக்க வேண்டிய சிம்மாசனத்தில் பதின்னான்கு ஆண்டுகள் பாதுகை இடம் பிடித்துக் கொண்டது.
இது வீட்டுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டால் வந்த விளைவு. ஆக, அக முரண்பாடுகள் ஏற்படும்போது அது பல்வேறு குழப்பங்களையும் சிக்கல் களையும் ஏற்படுத்தி விடுகின்றது.
இத்தகைய அக முரண்பாடு காரணமாக மிகப்பெரும் தோல்விகளையும் பின்னடைவு களையும் சந்தித்த ஓர் இனமாக ஈழத் தமிழினம் இருப்பதை இங்கு நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
இந்த அக முரண்பாடுகள் தமிழ் இனத்தின் இலக்குக்கு எப்போதும் ஈனமாக இருப்பதை அவதானிக்க முடியும்.
விடுதலைப் போராட்டம் நடந்தபோது அதனை எதிர்ப்பதற்கென ஒரு கூட்டம் நம் இனத்துக் குள்ளேயே இருந்தது.
அதேநேரம் விடுதலைப் போராட்டத்தை வீழ்த்த நினைத்த பேரினவாத சக்திகள், விடு தலைப் போராட்டக் கட்டமைப்புக்குள் உடைவை ஏற்படுத்தத் திட்டமிட்டன.
அந்தத் திட்டத்துக்கு சிலர் உதவியபோது, வானுயர்ந்து நின்ற தியாகங்கள் எல்லாம் வீழ்ந்து நொருங்குமளவுக்கு நிலைமையை ஆக்கியது.
மிக உயர்ந்த இடத்தில் போற்றப்பட்ட ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாமல் முடிவுக்கு வந்தபோது, ஜனநாயக வழியில் ஒற்றுமையாகப் பயணிக்கக் கூடிய அரசியல் கட்டமைப்பு தமிழினத்தில் இல்லாத வெறுமை பல்வேறு குழப்பங்களையும் சச்சரவுகளையும் தந்து நிற்க; இன்றுவரை தமிழினம் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாமல் துன்பத்தை மட்டுமே தாங்கி நிற்கிறது.
எதிலும் ஒற்றுமையில்லை என்பது மட்டுமல்ல. புரிந்துணர்விலும் ஏற்பட்டுள்ள பஞ்சம் தமிழினத்துக்குள் அக முரண்பாடுகளை ஆழ மாக்கிச் செல்ல அதுவே எம் இனத்துக்கு ஈன மாகிப் போயுள்ளது.
இந்த நிட்டூரம் இன்னமும் தணிந்த பாடில்லை.