நீதியரசர் விக்னேஸ்வரனை சி.ஐ.டி விசாரிக்கும் நிட்டூரம்
Share
இலங்கைப் பாராளுமன்றத்தின் 9ஆவது கூட்டத் தொடரின் போது சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்ற உரையில்,
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்;
இந்த நாட்டின் ஆதிக்குடிகளின் தாய்மொழியான தமிழால் உங்களை வாழ்த்துகிறேன் எனக் கூறியிருந்தார்.
இலங்கை மண்ணின் ஆதிக்குடிகள் தமிழர் என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியதுதான் தாமதம், பேரினவாதப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிக்குகளும் கெம்பி எழுந்தனர்.
இதில் சஜித் பிரேமதாஸ தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோசமிட்டார்.
அவரின் கோசத்தோடு தென்பகுதியின் பேரினவாத சக்திகளும் சேர்ந்து கொண்டன.
இருந்தும் வாசுதேவ நாணயக்கார, கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்கள் விக்னேஸ்வரனின் உரையைக் கண்டித்தவர்களைக் கண்டித்தனர்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டில் அப்படியே பதிவிடுமாறு சபாநாயகர் கூறியிருந்தார்.
நிலைமை அதனோடு முடிந்து போகுமென்றால் இல்லை. பெளத்த பிக்கு ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விக்னேஸ்வரனை குற்றவியல் பிரிவினர் விசாரணை நடத்திய வண்ணம் உள்ளனர்.
இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்கள் என்று அவர் கூறியதற்காக இத்துணை தூரம் விசாரணை நடத்துகின்றபோதிலும் அது தொடர்பில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கவலையோ கண்டனமோ தெரிவிக்காமல் மெளனமாக இருக்கின்றனர் எனில், இதைவிட்ட கொடுமை வேறு எதுவுமாக இருக்க முடியாது.
உண்மையைக் கூறப்போனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நம்மவர்கள் பொய்யுரைக்கின்றனர்.
தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனரே தவிர, அவர்களிடம் இதய சுத்தி யோடு கூடிய தமிழ்ப்பற்று அறவே இல்லை என்பதை அடித்துக் கூற முடியும்.
தமிழ்ப் பற்று இருந்திருக்குமாயின் இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தமிழர்கள் என்று கூறிய நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக – பக்கபலமாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பர்.
ஆனால், அவர்கள் எவரும் விக்னேஸ்வரன் கூறியது வரலாற்று உண்மை என்பதை எடுத்துரைக்கவில்லை.
அதுதான் இல்லை என்றால், நேற்று முன் தினம்வரை குற்றவியல் விசாரணைப் பிரிவினர் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை துருவித் துருவி விசாரிக்கின்றனரே, அதையேனும் கண்டிக்கின்ற மனச்சாட்சி இல்லாதவர்களுக்கு நம் தமிழ் மக்கள் வாக்களித்து தங்கள் தலையில் மண்ணைக் கொட்டியதைத் தவிர கண்டது வேறெதுவுமில்லை