தேர்தல் பற்றறுத்து அரசியல் செய்மினே!
Share
சைவாலங்களில் நடைபெறுகின்ற மகோற்சவம் என்பது நித்தியபூசைகளில் ஏற்படக் கூடிய தவறுகளை நிவர்த்தி செய்வதற்கானதாகும்.
எனவே மகோற்சவத்தில் தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது சிவாச்சாரியர்களின் கடமை.
தவிர, திருவிழாக்கள் என்பது இறைவனின் ஐந்தொழிலைக் குறிப்பதாகும்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலை அடிப் படையாகக் கொண்டு திருவிழாக்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இங்கு சிவப்பரம்பொருளே ஐந்தொழிலைப் புரிகின்றாராயினும் ஒரே வடிவத்தில் அவர் ஐந்தொழிலைப் புரிவதில்லை.
மாறாக படைத்தல் – பிரம்மா, காத்தல் – விஷ்ணு, அழித்தல் – உருத்திரன், மறைத்தல் – மகேஸ்வரன், அருளல் – சதாசிவன் என்ற வடிவத்தைத் தாங்கியே ஐந்தொழில் ஆற்றப் படுகிறது.
இந்த உலகப் பிரபஞ்சம் முழுமையும் இயங்கு வதற்கானதே பஞ்ச கிருத்தியமாகும்.
இஃது மனித உறவு நிலைகளுக்கும் பொருத்துடையது. அதாவது தனி ஒருவர் தந்தை, மாமன், ஆசிரியர், அதிகாரி எனப் பல வடிவங்களைத் தாங்குகிறார்.
ஆசிரியப் பணியை ஆற்றுகின்ற ஒருவர் தனது பணி இடத்தில் தந்தையாகவோ அன்றி மாமனாகவோ அன்றி அதிகாரியாகவோ இருக்க முடியாது.
மாறாக அவர் ஆசிரியராக மட்டுமே இருக்க முடியும்.
இதுபோல தந்தை என்ற ஸ்தானத்தில் இருக்கும்போது, ஒருவர் தன்னை அதிகாரியாகப் பாவனை செய்வாராயின் குடும்பத்தில் குழப்பத்தைத் தவிர வேறு எதுவும் நடக்காது.
இந்த அடிப்படையைக் கூறும்போது, இஃது எதற்கு என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம்.
அவ்வாறு கேட்டால், அந்தக் கேள்விக்கான பதில் இதுதான்.
எங்கள் தமிழ் அரசியலில் இருக்கக்கூடிய தவறுகளைக் களைந்து இனத்துவம் சார்ந்த அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இதற்காக தமிழ் அரசியல் தரப்புகளி டையே ஒற்றுமையை ஏற்படுத்துவது கட்டாய மானது.
எனினும் தமிழ் அரசியல் தரப்புகளிடையே முழுமையான ஒற்றுமையை ஏற்படுத்துவ தென்பது முடியாத காரியமாகவே இருந்து வருகிறது.
இதற்கான காரணம் என்ன என்றால், இங்குதான் ஒரே வடிவத்தில் நின்று கொண்டு நாம் எல்லாக் காரியங்களையும் செய்ய விளைகின்றோம்.
அவ்வாறு முனையும்போது தோல்விகளும் பகைமைகளும் வெறுப்புகளும் விரக்திகளும் எங்கள் அரசியல் புலத்தில் ஏற்பட்டு விடுகின்றன.
ஆக, தேர்தல் அரசியல் என்ற வடிவத்தை துறந்து – தேர்தல் பற்றைக் களைந்து மக் களுக்கான அரசியல் என்ற வடிவத்தைத் தாங்கும் போதுதான் தமிழ் அரசியல் தரப்பில் முழுமையான ஒற்றுமை ஏற்பட முடியும்.
இருந்தும் தேர்தலை துறந்து அரசியல் செய்வதற்கு யார் உளர் என்பதுதான் இங் கிருக்கக்கூடிய முக்கிய விடயம்.