கொரோனா அச்சம் இன்னமும் அகலவில்லை
Share
வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம்.
2020 மார்ச் 20ஆம் திகதி அமுலாகிய ஊரடங்குச் சட்டம் காரணமாக மறுநாள் 21ஆம் திகதியிலிருந்து வலம்புரி நாளிதழை அச்சிட முடியவில்லை.
உலகம் முழுவதையும் உலுப்பி நிற்கின்ற கொரோனாத் தொற்று இலங்கையிலும் ஏற் பட்டதன் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு அமுலாக்கப்பட்டது.
இன்று ஏப்ரல் 20ஆம் திகதியிலிருந்து வட மாகாணம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஊர டங்கு தளர்த்தப்படுகிறது.
ஊரடங்கு அமுலில் இருந்த காலத்தில் மின்னியல் ஊடாக வலம்புரி நாளிதழ் உங்களை வந்தடைந்திருந்தது.
எனினும் மின்னியல் ஊடாக வலம்புரி நாளிதழை நீங்கள் அனைவரும் வாசிப்ப தென்பது சாத்தியமாகி இருக்காது என்பதை எம்மால் உணர முடிகிறது.
அதேநேரம் அச்சு நாளிதழாக வாசிப்பதில் இருக்கின்ற திருப்தி என்பது வித்தியாசமானது.
அந்த வகையில் மீண்டும் வலம்புரி உங்கள் கரங்களில் வந்தடைவதற்கு வழிதந்த இறை பரம்பொருளுக்கு நன்றி கூறிக் கொள்கின்றோம்.
மேலும் உலகை உலுக்கி நிற்கின்ற கொரோனாத் தொற்று முழுமையாக இல்லாதுபோய் மக்கள் சமூகம் நிம்மதியாக வாழ நாம் அனைவரும் கூட்டாக இறைவனிடம் வேண்டுதல் செய்வோம்.
இதற்கு மேலாக புலம்பெயர் நாடுகளில் எங்கள் உறவுகள் சிலர் கொரோனாத் தொற் றுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவங்கள் எங்கள் இதயங்களைச் சுட்டெரிக்கின்றன.
இங்கு வாழ முடியாத சூழ்நிலையில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்காவது நிம்மதியாக வாழலாம் என்றால், அங்கும் கொடிய கொரோனா எங்கள் உறவுகளைப் பதம் பார்க்கிறது எனும் போது அந்தத் துன்பத்தை எங்ஙனம் தாங்க முடியும்.
ஆக, அன்புக்குரிய பெருமக்களே! இந்த உலகம் இறைவனின் படைப்பு. அவன் இன்றி அணுவும் அசையாது என்பது நம் முன்னோர்கள் கண்ட முடிவு.
ஆகையால் கொரோனாத் தொற்றில் இருந்து மக்கள் சமூகத்தைக் காப்பாற்ற நாம் அனை வரும் சதா இறைவனைப் பிரார்த்திப்போமாக.
தவிர, கொரோனாத் தொற்றில் இருந்து மக்களைக் பாதுகாப்பதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மக்களுக்குப் பல வழிகளிலும் அசெளகரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதைவிட்ட வழி வேறு இல்லை என்ற வகையில் ஊரடங்கை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாததாயிற்று.
இன்று ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற தென்பதற்காக, கொரோனா அச்சம் நீங்கி விட்டது என்று யாரும் நினைத்து விடக்கூடாது.
ஆகையால் ஊரடங்கு தளர்த்தப்பட்டது என்பதற்காக அனைவரும் முண்டியடித்து ஒரு நெருக்கடியான சூழமைவை ஏற்படுத்தாமல், கொரோனாத் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடிய அத்தனை நடைமுறை களையும் நாம் தொடர்ந்து பின்பற்றுவதில் மிகுந்த கருசனை காட்ட வேண்டும்.
இவ்வாறு காட்டப்படும் கருசனை எமதும் எம் சமூகத்தினதும் உயிரைக் காப்பாற்றும்.