அரசியலில் குதிக்கும் தொழிற்சங்கத் துரோகம்
Share
தொழிற்சங்கம் என்ற கட்டமைப்பு இன்று தனது இயல்பை இழந்து நிற்கிறது.
ஒரு காலத்தில் இருந்த தொழிற்சங்கங்கள் நடுவுநிலை நின்று தமது தொழிலாளர்களின் – பணியாளர்களின் – சேவையாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தன.
அதேநேரம் அரசியல் கட்சிகளும் தத்தம் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்களை அமைத் திருந்தன.
இவ்வாறு அரசியல் கட்சி சார்ந்து அமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் குறித்த கட்சி ஆதரவாளர்களாக இருக்கக்கூடிய பணியாளர்களே அங்கத்துவம் பெற்றிருப்பர்.
ஆக, அரசியல் கட்சியின் பெயரால் பகிரங்கப்படுத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் பற்றி இங்கு நாம் குறை கூற முடியாது.
ஏனெனில் அந்தத் தொழிற்சங்கங்கள் குறித்த அரசியல் கட்சி சார்ந்தவை என்பது பகிரங்கமானது.
ஆனால் சில தொழிற்சங்கங்கள் தங்களை கட்சி சாராத நடுநிலையான தொழிற்சங்கம் எனக் கூறி, அங்கத்தவர்களைச் சேர்த்துக் கொண்ட பின்னர்,
அரசியல் இலாபம் கருதி அரசியல் கட்சிகளுடன் இணைவதும் அந்தக் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதும் தமது விருப்பத்துக்குரிய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது என எழுந்தமானமாக முடிவெடுத்து அறிவிப்பதும் அதர்மத்தன மானவை.
உண்மையில் ஒரு நடுநிலையான தொழிற் சங்கமொன்றின் நிர்வாகிகள் அல்லது உறுப் பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், அந்தத் தொழிற்சங்கத்தில் இருந்து முழுமையாக விலகி தேர்தலில் போட்டியிட வேண்டும்.
அவ்வாறு தேர்தலில் போட்டியிட்ட பின்னர் மீண்டும் அதே தொழிற்சங்கத்தில் அவர் (கள்) இணைவது முற்றாகத் தடுக்கப்படுவதும் அவசியம்.
தவிர, ஒரு நடுநிலையான தொழிற்சங்க மொன்று ஏதேனும் அரசியல் கட்சியை ஆதரிப் பதாக இருந்தால், தனது சங்கத்தின் ஒட்டு மொத்த உறுப்பினர்களையும் அழைத்து கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்துக்களையும் ஒப்புதல்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதைவிடுத்து தங்கள் சொந்தத் தொழிற் சங்கம் போல செயற்பட்டு அரசியல் கட்சி களுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிப்பது அந்தத் தொழிற்சங்கங்களில் இருக்கின்ற அத்தனை அங்கத்தவர்களையும் ஏமாற்று வதும் உதாசீனம் செய்வதுமான செயற்பாடா கும்.
எனவே ஒரு நடுநிலையான தொழிற்சங்க மொன்று அரசியல் கட்சிகளின் பெயர் குறித்து தமது ஆதரவை வெளியிடுமாக இருந்தால், அதில் அங்கத்துவம் பெற்றுள்ளவர்கள் உட னடியாகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
அல்லது தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து அறிக்கையிட வேண்டும்.
இதுவும் ஆகவில்லை என்றால், குறித்த தொழிற்சங்கத்தின் உறுப்புரிமையில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
இதுவே நடுநிலையான தொழிற்சங்க உறுப்பினர்களின் நேர்மைத்தனமாக இருக்க முடியும்.