மாணவன் சுந்தர்பவனின் கல்விச் சாதனை காண்மினே!
Share
2020ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் (04) வெளியாகின.
பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் போதெல்லாம் அதன் மீதான கவனயீர்ப்பு எம்மிடம் உச்சமாக இருக்கும்.
அந்தளவுக்கு கல்வி மீது நம் தமிழ் மக்கள் பற்றும் அளவற்ற கரிசனையும் கொண்டவர்கள்.
ஒரு காலத்தில் இலங்கைத் தீவில் தமிழ் மக்களோடு கல்வியில் போட்டியிட முடியாது என்ற முடிவுக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள், கோட்டா முறையை அமுல்படுத்தி எம் மாணவர்களின் திறமையை மழுங்கடித்தனர்.
இதனால் தமிழ் மாணவர்கள் பட்டப் படிப்பை மேற்கொள்கின்ற வாய்ப்புகளை இழந்து போயினர்.
பின்னாளில் இதன் விளைவுகள் என்னவாக மாறிற்று என்பதை நாம் கூறி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இராது.
யுத்தம், இழப்புகள், இடப்பெயர்வுகள், புலம்பெயர்வுகள் என்பவற்றால் எங்கள் பிள்ளைகள் ஊர் கடந்தும் தேசம் கடந்தும் போக, காலாகாலமாகக் கட்டிக் காத்த எங்கள் கல்விச் செல்வமும் எங்களை விட்டு மெல்ல மெல்லக் குறைவடைந்து, கல்விப் பஞ்சம் என்ற வறுமையை நம் தமிழினம் அனுபவிக்கலாயிற்று.
30 ஆண்டுகால யுத்தமும் படித்த மக்கள் சமூகத்தின் நகர்வும் எங்கள் கல்விப் புலத்தை கடுமையாகத் தாக்கிவிட, கல்வியில் கடும் பின்னடைவு என்ற துர்ப்பாக்கிய நிலைமைகளுக்கு நம் தமிழினம் ஆளாக வேண்டியதாயிற்று.
இருந்தும் 2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கணிதப் பிரிவில், சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் அகில இலங்கையில் முதலிடம் பெற்று நம் தமிழ் மண்ணுக்குப் பெருமை தேடித் தந்தார் என்ற செய்தியை அறிந்த போது ஆனந்தக் கண்ணீர் எம் கன்னங்களின் ஓரங்களை நனைத்துக் கொண்டது.
மாணவன் சுந்தர்பவன் படைத்த சாதனை எங்கள் தமிழ் மக்களின் கல்வியின் பழம் பெருமையை எடுத்துக் காட்டுகிறது.
இஃது எம் கல்வியின் மீள் எழுச்சியின் ஒளியேற்றம்.
ஆம், கொரோனாத் தொற்றின் காரணமாக நாடு முடங்கிய போதிலும் கல்வியை நாம் ஒருபோதும் கைவிடோம் என்பதை இத்தேசத்துக்கு எடுத்தியம்புகின்ற சங்க நாதம்.
கிராமத்து கல்வியின் வலிமையை – ஆளுமையை – ஆற்றலை உயர்த்திக் காட்டுகின்ற வெற்றிக் கம்பம்.
மாணவன் சுந்தர்பவனின் சாதனை எங்கள் தமிழ் மாணவர்களுக்கான ஊக்க மருந்து.
இதே சாதனைகள் தொடர வேண்டும் என்பதுதான் நம் வேணவா.
இதற்கு மேலாக, 2020ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனைப் பெறுபேறுகள் பெற்ற அத்தனை மாணவர்களுக்கும் அவர்களை ஆளாக்கிய அத்தனை அர்ப்பணிப்புடைய உள்ளங்களுக்கும் தமிழினம் என்றும் தனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.