Type to search

Headlines

மன்னாரில் நேற்றும் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி

Share

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கொரோனாத் தொற்றுப் பரிசோதனையில் மன்னாரில் தனிமைப் படுத்தலிலுள்ள மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட 243 பேருக்கான மாதிரிகளில் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மன்னாரில் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை கிராமம் 24 மணி நேரம் முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். குணபாலன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகளுக்கு அமைவாக மன்னார், பட்டித்தோட்டம் கிராமத்தில் 5 பேருக்கும் மன்னார், பெரியகடை பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 90 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சுகாதார சேவைகள் அமைச்சின் பணிப்பாளரினால் மேலும் 24 மணி நேரம் மன்னார், பட்டித்தோட்டம் மற்றும் மன்னார், பெரியகடை ஆகிய இரண்டு கிராமங்களும் முடக்க நிலைக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் குறித்த இரு கிராமங்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி வரை முடக்க நிலையில் இருக்கும்.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இலங்கை அரச போக்கு வரத்து சேவை பேருந்துகள் போக்குவரத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதலாவது போக்குவரத்துச் சேவையானது மன்னார் ஆயர் இல்ல வீதியில் இருந்தும் இரண்டாவது போக்குவரத்துச் சேவையானது மன்னார் ரெலிக்கொம் சந்தியில் இருந்தும் காலை 8 மணிக்கு இடம்பெறும்.

எனவே உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமது போக்குவரத்துச் சேவை களை குறித்த போக்குவரத்து சேவைகள் ஊடாக மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link