காணாமல் ஆக்கப்பட்டவர்களுக் காக உறவுகள் கண்ணீர் மல்க கதறல்
Share
எட்டு மாவட்டங்களில் மாபெரும் எழுச்சிப் பேரணி
கோட்டா அரசே! நீ கடத்திய எங்கள் உறவுகள் எங்கே?
மன விரக்தியில் தாயார் ஒருவர் தனது கழுத்தையே நெரிக்க முற்பட்டார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழ் உட்பட 8 மாவட்டங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது யாழ். மாவட்டச் செயலக வாயிலில் நிறைவு பெற்றது.
இப்போராட்டத்தின் போது, ‘எமக்கு நீதி வேண்டும், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?, இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?’ கோட்டா அரசே நீ கடத்திய எங்கள் உறவுகள் எங்கே, போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.
குறித்த பேரணி யாழ். மாவட்டச் செயலகத்தை அடைந்ததும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரின் மனக்குமுறல் கண்ணீராக வெளிவந்தது.
இதன்போது மன விரக்தியடைந்திருந்த தாயொருவர் தனது முகத்தில் கட்டியிருந்த துணி யினால் தனது கழுத்தை தானே நெரிக்க முற்பட்டார்.
இந்த முயற்சி உடனடியாக அருகிலிருந்தவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் போராட்டத்தில் ஈடுபட்ட 72 உறவுகள் இதுவரையில் உயிரிழந்துள்ள நிலையில் இவ்வாறான செயற்பாடு அங்கிருந்தவர்களை மேலும் வருத்தமடையச் செய்தது.