சின்சினாட்டி அரையிறுதியில் இருந்து நவோமி ஒசாகா விலகல்
Share
கருப்பினத்தவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சின்சினாட்டி அரையிறுதியில் இருந்து நவோமி ஒசாகா விலகியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்-க்கு பயிற்சியாக கருதப்படும் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரையிறுதியில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார். ஒசாகாவின் முடிவு டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, விஸ்கான்சின் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் தனது காரில் ஏற முயற்சித்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் காருக்கு அருகே அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு பின்னாலிருந்து துப்பாக்கியால் பலமுறை சுட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஜேக்கப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜேக்கப் பிளேக் மீதான தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் நேற்று இரவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சிலர் போலீசார் மீது கற்கலை வீசியும், அருகில் இருந்த கார்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கலவரத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைக்கும் விதமாக கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டங்களுக்கு நடுவே நவீன ரக துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு இளைஞன் போராட்டக்காரர்களை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டான். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத போராட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்து ஒட முயற்சித்தனர்.
ஆனாலும், அந்த இளைஞன் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அதில் இரண்டு பேர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயங்களுடன் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.