சீனாவில் சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி – 8 மாலுமிகள் பலி
Share
சீனாவின் ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் 3 ஆயிரம் டன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே சென்ற போது மணல் ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் இந்த எண்ணெய் கப்பல் மோதியது.
இதில் எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.
15 கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.இந்த விபத்தில் 14 மாலுமிகள் மாயமான நிலையில் 3 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனிடையே பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று காலை எண்ணெய் கப்பலில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
இதில் எண்ணெய் கப்பலில் இருந்து 8 மாலுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 6 மாலுமிகள் மாயமாகியுள்ளனர்.
அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அறிய விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.