ஆலடி மாநாடு
Share
வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.
இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.
ஒருமாதிரியாகப் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து ஒன்பதாவது பாராளுமன்றமும் கூடிற்றுது. கங்காணி கார்த்திகேயன் குரல் கொடுத்தார்.
கங்காணி இவ்வாறு கூறியதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட அவலத்தைப் பார்த்தி யளோ. மூப்பர் மெதுவாகக் கூறினார்.
சாத்திரியார்: அதைத் தானே எங்கட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா பாராளுமன்றத்தில மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
சிறாப்பர்: இந்த நாட்டின் ஆதிக் குடிகளின் மொழி தமிழ் என்று நீதியரசர் கூறியதைப் பொறுக்க முடியாதவர்கள் அந்த உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்க வேணும் எண்டு சொல்லுகினம் பார்த்தியளோ.
விதானையார்: ஓ! உண்மையைச் சொன்னால் அவர்களுக்குப் பொறுக்க மாட்டுது தானே. இலங்கைத் திருநாட்டின் ஆதிக்குடிகளின் மொழி தமிழ் என்று விக்னேஸ்வரன் ஐயா கூறியதை ஹன்சார்ட்டில் இருந்து நீக்கலாம். ஆனால் வரலாற்றில இருந்து அதனை நீக்க முடியாது.
பண்டிதர்: என்னவோ நீதியரசர் விக்னேஸ்வரன் ஐயா பாராளுமன்றத்தில ஆற்றிய கன்னி உரை தமிழ் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்திருக்குது. அவரைப் பாராளு மன்றத்துக்கு அனுப்பி வைத்த தமிழ் மக்கள் கெட்டிக்காரர்கள் என்பதை எவரும் ஏற்றுத்தானாக வேண்டும்.
வாத்தியார்: விக்னேஸ்வரன் ஐயா, தம்பி கஜேந்திரகுமார் ஆகியோர் பாராளுமன்றத்தில எழுந்து உரையாற்றினால் அது கனதியாக இருக்கும் எண்டதுதானே தமிழ் மக்களின்ர நிலைப்பாடு.
இவ்வாறு வாத்தியார் வைத்திலிங்கம் கூறியதும் ஆலடியில் அமைதி நிலவியது. அந்த அமைதியைக் கலைக்க விதானையார் விசுவலிங்கம் குரல் கொடுத்தார்.
விதானையார்: விக் னேஸ்வரன் ஐயாவின்ர களநிலை அவருக்குச் சாதகமாக இருக்குது. ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்ர நிலைப்பாடு தான்…..
இவ்வாறு விதானை யார் விசுவலிங்கம் இழுத்தார்.
விதானையார் கூறியதை விளங்கிக் கொள்ள முடியாத கங்காணி கார்த்திகேயன் என்ன விதானையார் சொல்லுறியள். எதையும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்களன்.
விதானையார்: கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இந்தத் தேர்தலில இரண்டு ஆசனம் கிடைத்தது ஒரு பெரு வெற்றிதான்.
ஆனால் சாண் ஏற முழம் சறுக்கிறது மாதிரி கஜேந்திரகுமாருக்கும் மணி வண்ணனுக்கும் இடையில கருத்து முரண்பாடு ஏற்பட்டு கட்சியின்ர முக்கிய பதவிகளில இருந்து மணிவண்ணனை நீக்கியமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பின்னடைவு என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.
பண்டிதர்: உண்மைதான் முன்னணி பெற்ற வெற்றிக்குப் பின்னால மணிவண்ணன்ர வகிபங்கும் நிறைய இருக்குது.
இந்த நிலையில மணிவண்ணனை கட்சியின்ர முக்கிய பதவிகளில இருந்து நீக்கியதை முன்னணியின் ஆதரவாளர்கள் விரும்பமாட்டார்கள்.
வாத்தியார்: கட்சியின்ர உள்வீட்டுப் பிரச்சினையில வெளியார் தலையிடக்கூடாது எண்டு கஜேந்திரகுமார் சொன்னவரல்லோ. அப்ப அதுபற்றி நாங்கள் கதைக்கிறது சரியோ.
விதானையார்: கட்சியின்ர உள்வீட்டுப் பிரச்சினையில வெளியார் தலையிடக்கூடாது
எண்டு கஜேந்திரகுமார் கூறினது ஒரு அரசியல் அனுபவமானது அல்ல. எப்பவும் கட்சி ஆதரவாளர்கள் கட்சி தங் கட என்ற மன உணர்வோட தான் இருப்பினம். இதை கட்டாயமாக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேணும்.
இது எங்கட கட்சி. இங்க நடக்கிற பிரச்சினைகள் பற்றி எவரும் கதைக்க முடியாது எண்டு சொன்னால், அது சர்வாதிகாரத்தையே காட்டும். சர்வாதி காரப் போக்கின் விளைவுகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு செயற்படுவது நல்லது.
வாத்தியார்: சரி…சரி… அரசியலோடேயே காலத்தைச் செலவழிக்காதீங்க.
விதானையார்: வாத்தியார் நீங்கள் சொல்லுறது சரியாயினும் அரசியலும் மிகவும் முக்கியம். இந்தாப் பாருங்க ஜனாதிபயாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு அமைச்சுப் பதவி தனிலும் குடுபடல்ல.
மூப்பர்: அரசியலிலும் அறம் காப்பாற்றப்ப டவேணும் என்பதுதான் இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயம்.
சிறாப்பர்: மூப்பர் சொல்லுறதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யுது. தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின்ர நியமன எம். பி. பதவியை அம்பாறைக்கு வழங்கிய விடயத்தை துரைராஜசிங்கம் தனித்துத்தீர்மானித்தவராம்.
சாத்திரியார்: அப்ப இந்த விடயம் சம்பந்தருக்கும் தெரியாதோ.
சிறாப்பர்: சம்பந்தருக்குத் தெரியாமல் துரையர் செய்திருக்கமாட்டார். ஆனால் மாவையருக்கு தெரியாது என்பது மட்டும் உண்மை.
விதானையார்: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கே தெரியாமல் நியமன எம்.பி. பதவிக்கான பெயரை கட்சிச் செயலாளர் துரைராஜசிங்கம் சிபார்சு செய் திருக்கிறார் என்றால், அந்தக் கட்சியின் செயற்பாடுகள் எப்படி இருக்கு தெண்டு பாருங்களன்.
விதானையார்: இது கள் என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் நியமன எம்.பி. பதவியை திருமதி சசிகலா ரவிராஜுக்குக் கொடுப்பதற்கு நினைத்திருந்தேன் எண்டு மாவை சேனாதிராஜா கூறாமல் இருந்திருக்கலாம் என்பதுதான் என்ர கருத்து.
கங்காணி: ஏன் விதானையார் அப்படிச் சொல்லுறியள்.
விதானையார்: கங்காணியார் எல்லாவற்றுக்கும் பதிலை எதிர்பார்க்க முடியாது. சில விடயங்களைப் புரிந்து கொள்ள வேணும்.
இவ்வாறு விதானை யார்கூற, அதனை ஆமோதிப்பது போல ஆலடிப் பிள்ளையார் கோயில் கண்டாமணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்த அனைவரும் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.