அரச சேவையாளர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்
Share
அன்புக்குரிய அரச சேவையாளர்கள் அனைவருக்கும் மகிழ்வான வணக்கம். இன்று தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகிறது.
அரச பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, அவர் கள் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் மூல வாக்களிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுவில் தபால் மூல வாக்களிப்பு என்பது புதுமனைப் புகுவிழாவின் போது திறப்பு கையளிக்கின்ற நிகழ்வுக்கு ஒப்பானது.
ஆம், அரச சேவையாளர்களின் தபால் மூல வாக்களிப்பு எவ்வாறு அமைகிறதோ அதன் படியே பொதுமக்களின் வாக்களிப்பும் அமையும் என்பதைக் கடந்த காலத் தேர்தல்கள் ஆதாரப்படுத்தி நிற்கின்றன.
எனவே உங்களின் வாக்களிப்பு என்பது மிக மிக முக்கியமானது.
அன்புக்குரிய அரச சேவையாளர்களே! நம் தமிழ் பண்பாட்டில் இல்வாழ்வில் இணை வதற்கு முன்பாக பெண் பார்த்தல் என்ற நிகழ்வு இடம்பெறும்.
இதில் மணப் பெண்ணை குத்துவிளக்கில் தீபம் ஏற்றுமாறு கூறுவார்கள்.
ஒரு நெருப்புக் குச்சியைக் கொண்டு குத்து விளக்கில் உள்ள ஏழு தீபங்களையும் ஏற்ற வேண்டும்.
அவ்வாறு தீபம் ஏற்றப்படுமாயின் அஃது பெண்ணின் மன உறுதியையும் நிதானத்தையும் செலவுச் சிக்கனத்தையும் வெளிப்படுத்துவதாக அமையும்.
இதுதவிர, இதற்கு மேலான தத்துவம் ஒன்றும் உள்ளது.
அதாவது ஒரு தீக்குச்சியில் இருந்து எத்தனையோ தீபங்களை ஏற்ற முடியும். அந்தத் தீபங்கள் எங்கும் ஒளிமயமாகக் காட்சி தரும்.
ஆக, ஒரு பெண் தனக்குக் கிடைத்த ஒரு சிறு துரும்பில் இருந்து குடும்பச் செழிப்பை, ஐஸ்வரியத்தை ஏற்படுத்த வல்லவராக இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடாகவும் மணப் பெண் தீபம் ஏற்றும் நிகழ்வு அமைகிறது.
ஆக, இங்கு நீங்கள் அளிக்கப் போகும் தபால் மூல வாக்களிப்பும் அந்தத் தீபம் ஏற்றுவது போன்றதுதான்.
ஆம், நீங்கள் தபால் மூல வாக்களிப்பு மூல மாக ஏற்றி வைக்கின்ற தீபம் தமிழ் இனத் துக்கு ஒளியாக அமையட்டும். அந்த ஒளி எங்கும் பிரகாசித்து நேர்மையும் நீதியும் வெளிப் படைத்தன்மையும் வாக்கு வன்மையும் மனத் தூய்மையும் போலித்தனமற்ற தமிழினப் பற்றும் நிறைந்ததான தமிழ் அரசியல் தலைமையை தரட்டும்.
எனவே நீங்கள் வாக்களிப்பதற்கு முன்னதாக ஆழ்ந்து சிந்தியுங்கள்.
ஏனோதானோ என்று அலட்சியம் செய்து விடாதீர்கள். நீங்கள் அளிக்கும் வாக்குகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான அடித்தளம் என்பதை மறவாமல் உங்கள் வாக்குகளை அளியுங்கள்.
தமிழ் மக்களுக்கான நல்லதொரு அரசியல் தலைமையை உருவாக்குங்கள்