இராணுவம் அதிரடித் தாக்குதல் பயங்கரவாதிகள் 89 பேர் பலி
Share
நைஜீரிய இராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 89 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த 5 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர்.
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹராம், ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன.
இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும் பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்தத் தாக்குதல்களுக்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நைஜீரியாவின் சஃப்பாரா மாகாணம் சூர்மி பகுதியில் பயங்கரவாதிகள் பது ங்கி இருப்பதாக இராணுவத்திற்கு இரகசியத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையில் சூர்மி பகுதியில் பதுங்கியிருந்த 89 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும், பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த 3 பெண்கள் உட்பட பணயக்கைதிகள் 5 பேர் மீட்கப்பட்டனர்.
தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளால் திருடப்பட்ட 322 மாடுகள், 77 இரு சக்கர வாகனங்கள், 9 தொலைபேசிகள் மீட்கப்பட்டன.
மிகப்பெரியளவில் ஆயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
பயங்கரவாதிகளுடன் நடந்த இந்தச் சண்டையில் நைஜீரிய படையினர் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.