முகம் தெரியாமல் செய்த முகக் கவசத்துக்கே போற்றி
Share
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று மார் தட்டிய இனம் நம் தமிழினம்.
இங்கு தமிழன் என்று சொல்வதற்கும் தலைநிமிர்ந்து நிற்பதற்கும் உள்ள தொடர்பு என்ன?
என்று யாரேனும் கேட்டால் அதற்குரிய விளக்கத்தைக் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
தமிழ் என்பது அமிழ்தத்தின் ஊற்று. தமிழ் என்பதைத் தொடராகக் கூறும்போது அதன் ஓசை அமிழ்தம் என ஒலி தரும்.
தவிர, தமிழன் என்று மார்தட்டுகின்ற போதே வீரம் விளைந்து நிற்கும்.
இஃது மட்டுமல்ல, தமிழ் இனம் என்பது அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு புருடார்த்தங்களின் வழி நின்று இல்லறம், அறத்தின் வழி பொருள் ஈட்டல், விருந்தோம் பல், பெரியோரைக் கனம் பண்ணுதல், திருமணச் சிறப்பு, ஆன்மிகம் என இந்த உலகம் வியக்கக்கூடிய அத்தனை உயர்பண்பாட்டு விழுமியங்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு இனமாக தமிழ் இனம் இருப்பதாலேயே நாம் தமிழன் என்று மார்தட்டி தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது.
இவற்றோடு மட்டும் தமிழினத்தின் பெருமை நின்று விடவில்லை.
செம்மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழ் மொழி உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி.
தவிர, நடுநிலை நின்று நீதி வழங்கிய தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட இனம்.
வந்திருப்பது சிவப்பரம்பொருள் என்று தெரிந்திருந்தும் ஒரு மானிடனாக நின்று நெற் றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிடும் வல்லமை கொண்டவர்கள் வாழ்ந்த இனம்.
ஆகையால்தான் தமிழன் என்று கூறித் தலை நிமிரும் தகுதி நமக்கு உண்டு.
இதைவிட நம் ஈழத் தமிழினத்தில் வீரம், ஒழுக்கம் நிறைந்த ஓர் உயர்ந்த தியாகத்தைக் கண்டு உலகம் வியந்ததும் சமகாலத்துச்சான்று.
இது நம் தமிழ் இனத்தின் தகைமையாய் இருந்த போதும் கொரோனாத் தொற்றைத் தடுக்க அமுலாகி இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட,
நம் யாழ்ப்பாணத் தமிழ் மண்ணில் மதுபானச்சாலைகளுக்கு முன்னால் நின்ற நீண்ட வரிசையைக் கண்ணுற்ற போது ஓ! தமிழினமே உன் கதி இதுவா? என்று கட்டாந்தரை யில் நின்று கதற வேண்டும் போல் இருந்தது.
முடியவில்லையாயினும் மதுபானச்சாலைக்கு முன், வரிசையில் நின்றவர்களின் முகம் மறைத்த முகக்கவசத்துக்குப் போற்றி சொல்லி ஆறுதல் கண்டோம் அவ்வளவுதான்.